ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் “கொரில்லா”.
ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது.
இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.
இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் டான் சேண்டி கூறியதாவது:
“சிம்பன்சீகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவையாகும். அவை எப்போதும் புன்னகையுடன் இருப்பவையாகும் ஏன் என்றால் அவை எப்போதும் குறும்பானவை. இது பெரும்பாலான பார்வையாளர்களை கவர்ந்துவிடும். இதையே அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பன்சீ, ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்சீ 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிம்பன்சீ பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன”.
இந்த திரைப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கலை: ஆர்.கே.நாகு. படத்தொகுப்பு: ரூபன். “கொரில்லா” படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.