இன்று நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன் அரசியல் குறித்த நிலைபாட்டினை 31 ஆம் தேதி அறிவிக்கவிருப்பதை குறித்து இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்று கூறினார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது,
” கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள். சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு அந்த பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே அந்த பெயர் வந்தது.
அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர்.
ஒரு முறை நானும் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களும் கோவை சென்றிருந்த போது ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாங்கள் சென்ற போது ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர். பின் விழா முடிந்தவுடன் சிவாஜி ஐயாவிடம் இது குறித்த என் வருத்தத்தை தெரிவித்தேன். அதற்கு அவர் ரஜினி இதற்கு பெயர் தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம்.
எனவே எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ” என்று அவர் கூறினார்.