கடவுள், தாய் தந்தையின் கால்களில் தான் விழ வேண்டும் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு மூன்றாவது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை இன்று அவர் சந்தித்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை பார்த்த மதுரை ரசிகர்கள் ஊற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அவர்களின் ஆராவரத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் அவர்களிடம் மேடையில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர்,

“மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம்.” என்று பேசத் தொடங்கினார். “ரசிகர்களாகிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் ரசிகனாய் இருந்து வந்தவன் தான். சிறுவயதில் பெங்களூரில் இருந்த போது நான் கன்னடத்தில் பெரும் நடிகரான ராஜ்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல்முறை பார்த்தபோது நான் அவரை பார்க்க மறந்துவிட்டேன். அவர் நடித்த படங்கள் தான் கண்முன் வந்து போனது. உங்களை போலவே நானும் அவரை ஆர்வத்துடன் தொட்டிருக்கிறேன்.

முதலில் நாம் மூன்று பேர் காலில் விழ வேண்டும் கடவுள் மற்றும் நமக்கு உயிர்க்கொடுத்து உடல் கொடுத்த தாய் தந்தை கால்களில் விழ வேண்டும். அதையெடுத்து பெரியவர்கள் கால்களில் விழச் சொல்லுவார்கள். அதற்குக் காரணம், அவர்கள் பல சுக, துக்கங்களை சந்தித்து பல அனுபவங்கள் மிகுந்த பாதையை அவர்களின் பாதம் கடந்து வந்திருக்கும், அதில் நீயும் பயணிக்க இருக்கிறாய் என்பதால் தான்.

அதை விடுத்து பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழ வேண்டும் என்ற அவசியம் இல்லை”. என்று கூறினார்.

மேலும், ” உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கரி விருந்து வைக்க ஆசை தான். ஆனால், நான் பெருமாள் நட்சத்திரம். ராகவேந்திரா மண்டபத்திலும் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை. அதை இன்னொரு தருணத்தில் பார்த்துக் கொள்ளலாம் “. என்று கூறினார்.