ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார்.
எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளை செய்தார்.
அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜீ வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்
ஜீ வி பிரகாஷ்குமார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருக்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையப்பக்கத்தினை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.’ என்றார்.
ஜீ வி பிரகாஷ்குமார் ஏற்கனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தவிர்த்து ஜீ வி பிரகாஷ்குமார், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பள்ளிக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கழிப்பறை ஒன்றை கட்டிக் கொடுக்க நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்பதும், மருத்துவ படிப்பை இடை நிறுத்தம் செய்யவேண்டிய சூழலில் இருந்த மருத்துவ மாணவி சுகன்யா, தன்னுடைய மருத்துவ படிப்பைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை அளித்திருக்கிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.
ஜீவி பிரகாஷ்குமாரின் இந்த சமூக அக்கறை தொடரவேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பம்.