“சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்” – ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து , சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த உயரிய விருதை அளித்து வருகிறது. இந்த மேலான விருதின் 41 ஆண்டு கால வரலாறில், தமிழினத்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவர் இதனை பெறுவது இதுவே முதல் முறை. சிங்கப்பூர் அரசின் துணை பிரதம மந்திரி மாண்புமிகு திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்களின் கைகளால் ஷபீர் இந்த விருதினை பெற்றார்.

சிங்கப்பூரில் ஒரு சிறந்த தமிழ் ஆர்வலராக ஷபிர் என்றுமே இருந்து வந்துள்ளார். உலகின் தொன்மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. வரும் காலங்களிலும் தமிழ் அதன் சிறப்பில் இருந்து சற்றும் குறையாமல் இருக்க, இசை மற்றும் கலைத்துறை மூலமாக, இளைஞர்களை இணைத்து பங்காற்ற செய்வது மிகவும் முக்கியம் என்பது ஷபிரின் நம்பிக்கை. விருது பெரும் போது, பல மொழியினரும் நிறைந்திருந்த சபையிலும்,தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், தமிழின் பெருஞ்சிறப்புகளில் ஒன்றான திருக்குறளில் ஒரு குறளை மேற்கோள் காட்டி, அதன் பொருளையும், தனது வாழ்க்கைக்கு அக்குறள் ஊக்கமளித்ததையும் விளக்கி உரை அளித்தார்.

அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி அடைய இன்னொரு நற்செய்தி. “சகா” படத்திற்காக ஷபிர் எழுதி இயற்றிய யாயும் பாடல் தற்போது யூடியூப் இணையதளத்தில் ஐந்து மில்லியன் வியூஸ் அடைந்திருக்கிறது. பிரபலமான நடிகர்கள் இல்லமால், அறிமுக இசையமைப்பாளர் ஒருவரின் பாடல், குறுகிய காலத்தில் பிரபலம் அடைவது அரிது. ஆனால் அதற்கு மேல், சங்க கால இலக்கியத்தை கௌரவிக்கும் வண்ணத்தில், குறுந்தொகை கவிதையை பல்லவியாக பயன்படுத்தி, அது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவருவது அற்புதமான ஒரு நிகழ்வு.

இதற்க்கு முன்னதாக ஷபிர், தனது சிறப்பான இன்னிசை மற்றும் பாடல் படைப்புகளுக்காக, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கண்ணதாசன் விருது, ஆசிய தொலைக்காட்சி விருது, பிரதான விழா விருது (இரு முறை) போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார். முன்னர் , 2012 ஆண்டு ,சிங்கப்பூரின் பெருமைகளை தொகுத்தெழுதி, இசை அமைத்து, தானே பாடிய “சிங்கை நாடு” தமிழ் பாடலுக்காக ஷபிர் பிரதமர் மாண்புமிகு திரு. லீ சியன் லூங் அவர்களால் பாராட்ட பட்டார். அண்மையில் இரண்டு தமிழ் திரைப்படங்களுக்கு ஷபீர் பாடல்கள் எழுதி இசை அமைத்திருக்கிறார். மேலும் இரண்டு தமிழ் திரைபடங்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழுக்கும், இசை துறைக்கும் தனது பங்களிப்பை மென்மேலும் அளிக்க முழு முனைப்புடன் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறார் ஷபிர்.

 

Previous articleதுணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்
Next articleOur Alto is Back – Thanks For All Your Wishes – Vlog Episode