தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இ . இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த ‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
படத்தின் டெக்னிஷியன்கள் பேசியவை…
படத்தின் தயாரிப்பாளரும் படத்தில் இடம்பெற்ற ஒரு குறும்படத்தின் இயக்குநருமான சங்கர் தியாகராஜன்
இதழ்களில் சிறு சிறு துணுக்குகள் எழுதியது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 12 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தவன் சினிமா மீதான காதலால் மீண்டும் வந்தேன் . கேபிள் சங்கருடன் பேசியபோது குறும்படம் எடுக்க ஐடியா கொடுத்தார். பின்னர் அது அந்தாலஜி படமாக மாறியது. 6 வெவ்வேறு வகையான குறும்படங்களை இணைப்பது என்றும் அந்த ஆறையும் ஆறு டீம்களை வைத்து எடுப்பது என்றும் திட்டமிட்டோம். அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவானது. ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லா படங்களுக்குமான ஒரே க்ளைமாக்ஸாக முடியும். இவர்களில் கேபிள் சங்கர் தவிர மற்ற அனைவருமே அறிமுக இயக்குநர்கள்.
இந்த படத்தில் இடம்பெற்ற மூவருமே இங்கே வந்து கலந்துகொள்ள முடியவில்லை. என் கதையின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சிஜே.ராஜ்குமார் தான். . ராஜ்குமார் எனக்கு நீண்டகால நண்பர். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்ததை விட கலர் கரெக்ஷன் செய்தது தான் பெரிய சவால். வெவ்வேறு ஒளிப்பதிவுகளை ஒரே படமாக்குவது என்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும்.
இயக்குனர் கேபிள் சங்கர்
இந்த படத்தில் முதல் குறும்படம் என்னுடையதாக வருகிறது. சிறந்த இயக்குநரான எஸ் எஸ் ஸ்டான்லியை இயக்கியது மகிழ்ச்சி. என்னுடைய முதல் பட ஹீரோ தமன் குமார், எனது ஒளிப்பதிவாளர் சிஜே ராஜ்குமார் இருவருமே இதில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல் ஒரு வாய்ப்பாக எண்ணி பணிபுரிந்தனர். நீங்கள் பார்த்த இந்த பாடலின் வீடியோ அனிமேஷன் மட்டுமல்ல. முதலில் டான்ஸ் பண்ணி வீடியோ எடுத்து பின்னர் மனிதர்களை அனிமேஷன்களாக மாற்றினார். இந்த சிங்கிளுக்கு இசையமைத்தது ‘விக்ரம் வேதா’ புகழ் சி எஸ் சாம். அவரால் வரமுடியாத சூழல். பாடல் எழுதியது கார்க்கி பவா.
இயக்குனர் அஜயன் பாலா
எனது நீண்டகால போராட்டத்துக்கு பேய் தான் உதவி செய்து வெற்றிபெற வைத்திருக்கிறது. எனக்கு கிடைத்த ஒளிப்பதிவாளர் பொன்.காசிராஜன், ஹீரோ கிஷோர், இசையமைப்பாளர் மூவரும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்தார்கள்.
இயக்குனர் EAV சுரேஷ்
என்னுடைய குரு கேபிள் சங்கருக்கு நன்றிகள். தாம்பரம் தாண்டி ஒரு குடிசைக்குள் எடுத்தோம். முதல் நாள் காலை 7 மணி முதல் மறுநாள் மதியம் 11 மணி வரை தொடர்ந்து எடுத்தோம். தாஜ்நூர் எனக்காக இசையமைக்க ஒப்புக்கொண்டதோடு அருமையான பின்னணி இசையை தந்தார். நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். சினிமாவில் முயற்சி எடுத்தபோது ஊரே திட்டியது. ஆனால் எனக்கு பக்கபலமாக இருந்தது என் தந்தை தான். அவருக்கு என் நன்றிகள்.
இயக்குனர் லோகேஷ் ராஜேந்திரன்
இந்த படத்தில் கமிட் ஆனபோது மகிழ்ச்சியை விட ஆச்சர்யமாக தான் இருந்தது. 6 இயக்குநர்கள் எப்படி ஒரு படத்தை இயக்கப்போகிறோம் என்று. 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 20 ஓவர் கிரிக்கெட் வந்தது போன்றது தான் இந்த படம்.
இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்
நான் உதவி இயக்குநராக இருந்ததில்லை. குறும்படங்கள் தான் இயக்கியிருந்தேன். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்ததற்கு நன்றிகள். என் அம்மாவுக்காக இன்னும் ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே தான் படத்தை இயக்கினேன்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசியவை…
இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி
இதே தியேட்டரில் ஒரு ஷோ முடிந்தபிறகு கேபிள் சங்கரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு கதை சொல்லி என்னை நடிக்க சொன்னார். பிரமாதமான கதை. சங்கர் தியாகராஜனுக்கு பெரிய நன்றியை சொல்லவேண்டும். எல்லா வெள்ளிக்கிழமையும் காலை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும்போது எங்களுக்குள் விவாதங்கள் நடக்கும். வாராவாரம் கூடி பேசுவோம். மிக சரியாக திட்டமிட்டு இதனை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக அஜயன்பாலா, பொன் காசிராஜன் இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவரும் இதில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் தாஜ்நூர்
இயக்குநர் சுரேஷ் என்னிடம் ஒரு குறும்படம் என்று சொன்னார். அது பெரிய படமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இயக்குநர் சேரன்
கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு தான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது. ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும். அப்போது இந்த இளைஞர்களுக்கு தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதை சரியான முறையில் புரமோஷன் செய்து வியாபாரத்திலும் லாபம் பார்க்க வேண்டும். சேரன் சொன்னதுபோல இணையத்தில் வெளியிட்டும் பெரிய லாபம் பார்க்க வேண்டும். அஜயன்பாலா இயக்குநராகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘பாஃப்டா’ சார்பாக இதேபோல் வண்ணச்சிறகுகள் என்று ரிலீஸ் ஆகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம்
வித்தியாசத்துக்கு பார்த்திபனும் ஆக்ரோஷமாக பேச சுரேஷ் காமாட்சியும் இருக்கிறார்கள். சேரன் உணர்ச்சிமயமாக பேசுபவர். ஆனால் உண்மையைத் தான் பேசுவார். கில்டு சார்பில் சில முயற்சிகள் நடக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் பட ரிலீஸ் அன்றே தயாரிப்பாளர்கள் கைகளில் ஒன்றரை கோடி இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் நல்ல காலம் பிறக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
இயக்குநர் சசி
என்னுடைய நண்பர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இந்த டீம் மிகவும் நம்பிக்கையான டீமாக இருக்கிறது. படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்.
இயக்குநர் ரவிக்குமார்
அஜயன்பாலாவும் கேபிள் சங்கரும் தான் நான் வரக் காரணம். தமிழில் இரண்டு கதைகள் கொண்ட படம், அவியல் போன்ற ஒரு வித்தியாசமான முயற்சி இது. ஒரே கதையாக பார்க்கும் நமக்கு இது ரொம்ப புதுசா இருக்கும். சில படங்களில் அரை மணி நேரம் தான் கதை இருக்கும். இழுத்திருப்போம். அதுபோன்ற கதையை இப்படி எடுக்கலாம்.
இயக்குநர் மீரா கதிரவன்
இந்த நிகழ்வு என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. என்னை வழி நடத்திய அஜயன்பாலா இயக்குநர் ஆகியிருக்கிறார். கேபிள் சங்கர் சினிமா வியாபாரத்தை பற்றி எழுதியவர். ரசிகர்களின் கணக்கும் நம் கணக்கும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் தான் வெற்றியை பார்க்க வேண்டும். ரசிகர்கள் என்று பொதுவாக சொல்கிறோம். ஆனால் ரசிகர்களில் வெவ்வேறு வகை உண்டு. ஆனால் இன்றைய நாளில் மூன்றே நாளில் படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது. இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான். அவனைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது. என் படம் ரிலீஸ் தள்ளிப்போனபோது எனக்காக பார்த்திபன் குரல் கொடுத்திருந்தார். அது எனக்கு பெரிய ஆறுதல் தந்தது. பார்த்திபன் அவர்களுக்கு நன்றிகள். ஒரு படத்தின் புரமோஷனுக்கு ஆர்ட்டிஸ்ட் வரவேண்டும் என்பதை சங்கங்கள் கட்டாயமாக்க வேண்டும்.
இயக்குநர் அறிவழகன்
பார்த்திபன் சார் எப்போதுமே சுவையாக பேசக்கூடியவர். அந்த சுவாரஸ்யம் தான் சினிமாவுக்கு தேவை. இந்த படம் பற்றி கேட்கும்போதே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஷங்கரிடம் வேலை பார்த்தாலும் மற்ற இயக்குநர்களிடமும் ஒவ்வொன்று ஏகலைவனாக கற்றிருக்கிறேன். படத்தை வீடுகளுக்கு கொண்டு செல்வது இனி மிக அவசியம்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ்
கேபிள் சங்கர் எனக்கு நல்ல நண்பர். நான் ஒரு படத்துக்கு அஜயன்பாலாவை வசனம் எழுத அழைத்தேன். அவர் யோசித்தார். கமர்ஷியல் தான் கஷ்டம் என்று சொல்லி எழுத வைத்திருக்கிறேன். இந்த படம் தான் எதிர்கால சினிமா. டீம் டீமாக சேர்ந்து படம் பண்ணுவது இனி அதிகரிக்கும். இந்த படம் அதற்கு தொடக்கமாக அமையும். மாஸ் ஹீரோவுக்கு நிகரான பேய் இந்த படத்தில் இருக்கிறது. அது நிச்சயம் ஹிட்டை தரும். சேரனின் சி2எச்சுக்கு இந்த திரையுலகம் உதவி புரியவில்லை என்பதை சுரேஷ் காமாட்சி விளக்க வேண்டும்.
இயக்குநர் தாமிரா
இந்த மேடையை பார்க்கும்போது எனக்குள் பேய் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இந்த படம் தொடங்கியது முதல் கூடவே இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பளிக்கவில்லை. தாமதமாகத் தான் கேபிள் சங்கரிடம் கேட்டார். என்னிடம் முன்பே கேட்டிருந்தால் இது 7 அத்தியாயமாக மாறி இருக்கும். வெகு விரைவில் அஜயன்பாலா பெரிய படம் ஒன்றை இயக்குவார். அதற்கான வேலைகள் நடக்கின்றன.
நடிகர் இயக்குநர் பார்த்திபன்
மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்.
இயக்குநர் வெற்றிமாறன்
இந்த மாதிரியான முயற்சிகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழிலுல் மிகச்சில நடந்தன. இந்த முயற்சி நாம் ஊக்குவிக்க வேண்டியது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இது மிகவும் சிரமமான வேலை. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பேயை கையில் எடுத்திருப்பது வியாபாரத்துக்கு எளிதாக இருக்கும். அஜயன்பாலாவை என்னுடைய குரு பாலு மகேந்திரா தான் அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த எழுத்தாளர். நேர்மையான விமர்சகர். அவர் மீது நம்பிக்கை உள்ளது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
சினிமா வியாபாரத்தை பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்துபோய்க்கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் பண்ணிவிடலாம். படம் பண்ணிவிட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம். கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமா. மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வது இல்லை. தவறான விஷயத்தை சொல்லிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. இது எல்லாம் தவறான ஒன்று.
கதாசிரியர்களை மதிப்பதில்லை. காம்பினேஷனுக்கு தான் இங்கே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை புரமோஷனிலும் எடுத்து சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவுக்கு இரண்டு புதிய பிஆர்.ஓக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.
சேரன் கொண்டு வந்த சி2எச் ஏன் தோல்வி அடைந்தது என்று பார்த்திபன் தான் பதில் சொல்லவேண்டும். அவர்தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர். பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. நடிகர்கள் தான் அத்ற்கு காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.
ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்? ஸ்ட்ரைக்கை அறிவித்து பின்னர் முடித்தீர்கள். ஜிஎஸ்டிக்கு ஸ்ட்ரைக் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள்? தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்துவிட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சி தான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?
பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத் தான் சங்கம் நடக்கிறது. கோக்க கோலாவை எதிர்த்து வசனம் பேசும் ஹீரோ தான் கோக்க கோலா விளம்பரத்தில் நடிக்கிறார். ஆன்லைன் வியாபாரத்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கு விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார். ஆனால் அதிகமாகத் தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறிவிட்டது. கேபிள் டிவியில் ஒன்றரை கோடி எப்படி வரும்? ஒரிஜினல் சிடி மார்க்கெட்டை திறந்துவிட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத் தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
தியேட்டர்காரர்கள் மூன்று மாதங்கள் கழித்துதான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இதுப்போன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் அவர்கள் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும். தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும் பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? விஷாலுக்கு எதிராக ஏன் எப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள் தான்.