எக்ஸ் வீடியோஸ் படத்தின் மூலம் வரும் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் சஜோ சுந்தர் திட்டம்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது ,

” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. . ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ .அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவும் வைத்தது. அப்படிப்பட்டவை பற்றிய விவரம் சேகரிக்க இறங்கிய போது பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரிய வந்தன. இப்படி சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்க செல்கின்றன . அது தொடர்பாகப் பல கோடி வியாபாரம் நட க்கிறது. அதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இயங்கி வருகிறது.

இவை எனக்குப் புரிந்ததும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம். இது பற்றிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது என் கடமையாகத் தோன்றியது.
இந்தப் படக் கதை பற்றிப் பலரும் பயந்தார்கள் .எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது . முதலில் என் மனைவியைச் சமாதானப்படுத்திப் புரிய வைக்கப் படாத பாடுபட்டேன். இப்படியே நடிகர்கள் ,தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது . மற்றவர்கள் போல நீங்களும் வியாபார சினிமா எடுத்து விட்டுப் போகலாமே என்று இப்போதும் எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் இப்போது நான் சொல்கிறேன். இது ஆபாசமான படமல்ல. ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம். இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை . ஏதாவது கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப் படுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். இதைத் தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம். சென்சாரில் ரிவைசிங் கமிட்டி போனபோது கமிட்டியில் இருந்த பிரபல இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார்.
எல்லாரும் சொல்கிறார்கள் வணிகப் படம் எடுத்து ஏன் சம்பாதிக்கக் கூடாது என்று. இன்று எத்தனை பேர் படமெடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.? நான் சமீபத்தில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாமல் பெண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்று . இது எவ்வளவு பெரிய கொடுமை . நான் இப்போது மனப்பூர்வமாகச் சொல்கிறேன் இந்தப் படத்தில் எனக்கு லாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன்

​​ . ” இவ்வாறு இயக்குநர் பேசினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் அக்ஷயா பேசும் போது,

” நான் நடிப்பிலிருந்து தயாரிப்புத் துறைக்கு வந்தவள்.இது ஆண்கள் நிறைய பேர் பணியாற்றிய படக் குழு . சுற்றிலும் ஆண்கள் நடுவில் நான் மட்டும் பெண் என்று பணியாற்றினாலும் எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. முழு சுதந்திரம் இருந்தது.. ” என்றார்.

நாயகன் அபிநவ் பேசும்போது, “என்னை நடிக்கத் தேர்வு செய்யும் முன் இயக்குநர் கண்டிப்பாக இருந்தார். நடிக்கத் தொடங்கிய பின் சுதந்திரமாக இயங்க முடிந்தது. இந்தப் படம் சமுதாயத்துக்கு அவசியமான படம்” என்றார்.

இன்னொரு நாயகன் நிஜய் பேசும் போது,

” சவாலான விஷயத்தை துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ” என்றார்.

மற்றொரு நாயகன் ஷான் பேசும் போது,

” படத்தில் நான் கதாநாயகன் அல்ல. இங்குள்ள எல்லாருமே கதாநாயகர்கள் தான். இந்தப் படத்தை எடுக்க இயக்குநர் இந்த திரையுலகம் , நண்பர்கள் ,குடும்பம் என எல்லாவற் றையும் தாண்டி எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

நடிகர் அஜய்ராஜ் பேசும் போது ,
” நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் செட்டிலாகியிருக்கிறேன். உத்தம வில்லன் , பொறியாளன் ,தாயம் படங்களைத் தொடர்ந்து இது எனக்கு ஐந்தாவது படம். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் . சமூகக் குற்றம் பற்றி துணிச்சலாக இப்படம் சொல்கிறது. ” என்றார்.

நாயகி ஆஹிருதி சிங் பேசும் போது ,

” இப்படத்தில் நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.. மகிழ்ச்சியான அனுபவம். படக் குழுவுக்கு என் நன்றி.” என்றார்.

கலை இயக்குநர் கதிர் பேசும் போது,
“சஜோ எனக்கு 15 ஆண்டுகால நண்பர். எதையும் துல்லியமாகப் பார்ப்பவர். இந்தக் கதையை என்னிடம் கூறிய போது நன்றாக இருந்தது. ஆனால் பயமாக இருந்தது. அவருக்காக படத்தில் நான் பணியாற்றினேன். இருந்தாலும் படத்தைக் காட்டிய பின் தான் என் பெயரைப் போட வேண்டும் என்றேன். அவ்வளவு பயமுறுத்தியது கதை. ஆனால் படம் பார்த்த பின் சமாதானமானேன். நாக​ரீ​கமாகவே எடுத்திருக்கிறார். ” என்றார்.

Previous articleIppadai Vellum Audio Launch Photos
Next articleX Videos Movie Press Meet Stills