சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம்..
ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.
இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இரண்டு நாயகிகள்.. அதில் கோலிசோடா சீதா ஒருவர்.. இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை.. தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே! கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை.. அதை அணிவதில் என்ன கூச்சமும் வெட்கமும் என்கிறார் சாம்பார் ராசன்.
சரி அது என்ன சாம்பார் ராசன்..? மக்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாம இடம்பெறும் இல்லையா.. அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பதற்காக தனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன் என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன். இவரது பூர்விகம் கோவை..
என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன் வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன் என்கிறார் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றவுடன்.. எனக்கு யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என் கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் மக்கள் எல்லோரும் என்னைப்பார்த்து சிரிக்கணும்.. அதுதான் என் லட்சியம் என்கிறார்.
கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.. மாட்டை பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா..? “படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன். படங்களில் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்த காலம்.. நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி என்பதால் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்..” என இன்னொரு குண்டை தூக்கிப்போடுகிறார்.
ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறார் இந்த ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.. விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.