உண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்!

கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன் முறையாக இயக்கும் படம் மிக மிக அவசரம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பெண் காவலர்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படமாக உருவாகி இருக்கிறது மிக மிக அவசரம்.

இந்தப் படத்தில் பத்திரிகையாளர் காவேரி மாணிக்கத்தையும் நடிக்க வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

மேலை நாட்டு சினிமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபர்களை பிச்சையெடுக்க செல்ல சொல்லுவாராம். யார் அதிகமாக பிச்சையெடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பாராம். தன்னை கீழே இறக்கி கொள்பவனே சிறந்த நடிகனாக முடியும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. காவேரி மாணிக்கம் மிக மிக அவசரம் படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடத்த சுவாரஸ்யமான அந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ் காமாட்சி.

‘முதலில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒரு பத்திரிகையாளரை நடிக்க வைக்க தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் காவேரி மாணிக்கம் உடனே ஆர்வமுடன் ஒப்புக்கொண்டார். பவானி முக்கூடல் திருவிழாவில் பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். காவேரி மாணிக்கம் திடகாத்திரமான ஆள். ஆனால் பிச்சைக்காரனுக்கான மேக்கப், காஸ்ட்யூம் அணிந்த பிறகு அங்கே கீழே விழுந்து உருண்டு புரண்டு அசல் பிச்சைக்காரனாகவே மாறினார். அன்று காவேரி மாணிக்கம் பிச்சை எடுத்த தட்டில் மட்டும் நூறு ரூபாய்க்கு மேல் விழுந்தது. அங்கிருந்த மற்ற பிச்சைக்காரர்கள் காவேரியை கடுப்பாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் பிச்சைக்காரர் அல்ல… படத்துக்காக நடிக்கிறார் என கடைசி வரை அவர்களுக்குத் தெரியவே இல்லை..,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கதை நாயகியாக நடிக்கும் ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ராமதாஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே இந்தப் படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்வேன்,” என்றார்.

இன்னொரு சுவாரஸ்ய சம்பவம், தான் பிச்சையெடுத்த அந்த நூற்றி சொச்ச ரூபாயையும் தயாரிப்பாளரிடமே கொடுத்து விட்டாராம். சுரேஷ் காமாட்சி அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து, அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்துள்ளார்!