இன்டர்வெல் எப்போது வரப்போகின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.. ஏசி இல்லாத தியேட்டரில் மதிய காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இன்டர்வெல் என்று பெயர் போடுவதற்கு 45 செகன்டுக்கு முன்னே…
எக்சிட் கதவு அருகே இருக்கும் கிழிந்து போய் அழுக்கு ஏறிய கருநீல அல்லது சிவப்பு ஸ்கீரினை… சரரரரக் என்று இழுத்து புயல் போல் உள்ளே நுழைந்து காத்து இருப்பார்கள்… திரையில் சன் லைட் போய் பாடாய் படுத்தும்.. இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை அது அவர்களுக்கான ஹீரோதனம் மட்டுமல்ல…. அவர்களிடம் மற்றவர்கள் கவனம் ஈர்க்கும் செயலும் பெருமையும் மிதமிஞ்சி இருக்கும்… ஒரு ஹீரோ என்ட்ரிக்கு நிகராக அவர்கள் நடந்துக்கொள்வார்கள்.. அல்லது தங்களை அந்த திரைப்படத்தின் ஹீரோவாகவே கற்பனை செய்துக்கொள்ளுவார்கள்.
இதுவே டென்ட் கொட்டாய் என்றால் இவர்கள் ஜம்பம் பலிக்காது… திரையில் இன்டர்வெல் பெயர் வந்ததும் அழுது வடியும் டங்ஸ்டன் குண்டு பல்பை ஆப்பரேட்டர் ஆன் செய்ததும்தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள்… அதுவரை சைடில் இருக்கும் மரக்கட்டையில் கால் மாற்றி கால் மாற்றி நின்றுக்கொண்டு இருப்பார்கள்…
தட்டு முறுக்கேகேகேகே என்று ஒரு அழகியலுடன் சொல்லுவார்கள்.. ஜோப்பியில் இருக்கும் சில்லரையை தேடி நாலானா எட்டனாவுக்கு முறுக்கு மற்றும் தேங்கா ரொட்டி வாங்குவோம். அப்ப பாப்கான் என்று கேட்கலாம்… அப்போது பாப்கான் எல்லாம் பொருட்காட்சிகளில்தான் கிடைக்கும்…
பாப்கான் தலை காட்டாத காலக்கட்டம்…
ஆறு மணி காட்சிக்கு கடலூர் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டகைக்கு போனா– ஏழு மணிக்கு படம் போடுவான்.. எட்டேகாலுக்கு இன்டர்வெல்… விட்டால் பசி வயிற்றை பதம் பார்க்கும் பிரிட்டானிய பிஸ்கெட் தகர டப்பாவை அலுமினியே டிரே ரேஞ்சிக்கு வடிவமைத்து அதில் தேங்கா ரொட்டி , நெய் வரிக்கி, ஸ்வீட் முக்கோண பன், மற்றும் முறுக்கினை விற்பார்கள்.…
பெஞ்சி டிக்கெட்டில் தட்டு முறுக்கு விற்கும் போது அதே பையன்கள் கொஞ்சம் டிசன்டாக பணிவாக நடந்துக்கொள்வார்கள்… டிரவுசரில் பட்டன் போய் அதை முடிச்சி போட்டு தட்டை தூக்கி நடந்த படியே விற்க சட்டென முடிச்சி அவுத்துக்கொள்ளும் போது பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் யக்கா இதை புடி என்று சட்டென வேகமாக டிரவுசரில் முடி போட்டு தட்டை வாங்கி கொள்வார்கள்.
டென்ட் கொட்டைகையை பொருத்தவரை எம்ஜிஆர் படங்கள்தான் கலெக்ஷன் மாஸ்… அதனால் தட்டு முறுக்கு வியாபாரம் கொடி கட்டி பறக்கும் படம் பார்த்த மகிழ்வில் குடும்பத்தினருக்கு கேட்டது எல்லாம் கிடைக்கும். அப்போது மட்டும் தட்டில் நிறைய சில்லரைகளோடு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகள் காணகிடைக்கும்…
சில தியேட்டர்களில் மல்லாட்டை மற்றும் சிறுபயிறு, போன்றவற்றுடன் மந்தாரை இலையில் கார காரசேவும் பகோடாவும் கிடைக்கும்… அதே போல கூம்பு வடிவ பேப்பர் சுற்றி தேங்காய்மாங்காய் பட்டாணி சுண்டலும் கிடைக்கும்.
இதுவே டவுனில் இருக்கும் கடலூர் வேல்முருகன் ரமேஷ் தியேட்டர் வகையாறா என்றால் பேக்ரி ஐட்டம் அதில் இருக்கும்… முக்கியமாக பன்னீர் சோடா கருப்பு கிரஷ் மற்றும் கோல்ட் ஸ்பாட் பணக்காரர்களின் விருப்ப டிரிங்காக இருக்கும் .. கவனம் ஈர்க்க சோடா ஓப்பனர் வைத்து கிரஷ் பாட்டில்களில் டிங் டிங் என்று அடித்து வரவேற்பார்கள்.. ஸ்வீட் பன்னில் ஓயிட் ஜாம் தடவி அதில் குங்கும பூ போன்ற செய்ற்கை வஸ்த்துவை தூவி நம் நாவில் எச்சில் வர எல்லா வேலையும் செய்து வைப்பார்கள்…
அதே போல கேக் நெய் வரிக்கி கூடைகேக் போன்றவை கிடைக்கும்… தட்டு முறுக்கு தட்டில் நிச்சயம் தேங்கா ரொட்டியும் முறுக்கும் நிச்சயம் இருக்கும்.
1995க்கு பிறகுதான் பாண்டி தியேட்டர்களில் பார்ப்கான் தலைகாட்டி மெல்ல கடலூ’ர் பக்கம் கால் பதித்தது.. அதாவது பாப்கான் மற்றும் சமோசா ரெண்டு ஒன்றாக பாண்டியில் இருந்து கடலுர் பக்கம் தலைகாட்டின என்று சொல்லலாம்.
சென்னை சத்தியம் தியேட்டரில் 300 ரூபாய்க்கு பாப்கான் மற்றும் கொக்கோ கோலா வாங்கி கொடுத்தேன் என்று செத்து போன என் அம்மாவுக்கு தெரிந்தால்,.. அவ்வளவுதான் ஆவியாக வந்து கூட என்னை அடித்து துவைத்துவிடுவார்கள்..
என் அம்மா ஒரு போதும் தியேட்டர் பண்டங்களை வாங்கி கொடுக்க மாட்டார் வீட்டில் இருந்தே ஒயர் கூடையில் பட்டாணி உப்புக்கடலை தண்ணி பாட்டில் என்று எல்லாத்தையும் எடுத்து வந்து விடுவார்…
இப்போது போல திண்பன்டங்கள் தியேட்டரில் உள்ளே அனுமதி இல்லை என்று எழுதாத காலகட்டம்.
இப்போது எதேச்சையாக தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்கள் சத்தியமில் பாகுபலி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நினைவுக்கு வந்தார்கள்.. ச்சே அந்த பசங்க எல்லாம் இப்ப இல்லவே இல்லை என்று நினைத்துக்கொண்டேன்..
இன்டர்வெல் வந்தது..
சத்யம் கேன்டினுக்கு போனேன்
சார் பார்ப்கான் கோலா மற்றும் வெஜ் பப்ஸ் கம்போ…
எனிதிங் எல்ஸ் சார்..
நோ…
சீட் நம்பர் சொலுங்க..
டி ரோ சீட் நம்பர் 12,13 என்றேன்..
நீங்க போங்க பத்து நிமிஷத்துல வந்து கொடுத்துடுவாங்க.. என்றார்..
நான் சீட்டில் ஆக்கரமித்தேன்…
படம் தொடங்கிய இரண்டு நிமிடத்தில் நான் ஆர்டர் செய்த பொருட்கள் டார்ச் டிலைட் உதவியோடு டிரேயில் என்னிடத்தில் வந்தன….
எடுத்து வந்த பையனை பார்த்தேன்…
கடலூர் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டகையில் தட்டு முறுக்கு விற்கும் பையனை நினைவுபடுத்தினான்…
என்ன… காலமாற்றத்துக்கு ஏற்ப பேன்ட சட்டை யூனிபார்ம் போட்டு தலையில் தொப்பி அணிந்து இருக்கின்றான்… தட்டு முறுக்கே என்று சீட் வரிசைகளில் தாவி தாவி அலுமினிய டிரே தட்டுடன் கூவி கூவி விற்பதில்லை.
தட்டு முறுக்கு விற்பவர்கள் காணமல் போகவில்லை கால ஓட்டத்தில் உரு மாறி இருக்கின்றார்கள்.. அவ்வளவே.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்