கேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்

219

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.. ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.

மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.. நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும், அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டமாகட்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுகொல்லப்பட்டபோது நடந்த போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடியும்.

டில்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்காக இங்கிருந்து எந்த ஒரு பெரிய நடிகரும் வாய் திறக்க யோசித்த நிலையில், அந்த விவசாயிகளுடன் விவசாயியாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தவர் தான் அபி சரவணன். பின்னர் அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத்தந்தார்.

மே-18 என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள்.. தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் “பிரிட்டிஷ் பங்களா” என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த நம் ஈழத்து சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள்… ஆனால் மனதால் ஒன்றுபட்டு அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்தினர் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.

Previous articleகருப்பையா முருகன் இயக்கும் “கமர்”
Next articleSangili Bungili Kadhava Thorae Success Meet