Inayathalam Movie Review

சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பவர்களை விழித்துக் கொள்ள செய்யும் விழிப்புணர்வு தொடர்பான பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அப்படி ஒரு படமாகவே உள்ளது இந்த ‘இணையதளம்’.

ஒரு இணையதளத்தின் நேரலை வீடியோவில் டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அந்த இணையதளத்தில் வீடியோவை நேரலையில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூட கூட அவர் மரண கட்டத்தை நெருங்குகிறார்.

இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவின் (Cyber Crime) பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபடுகிறார்கள். அப்போது, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார்.

இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் உயிருக்கு போராடி உயிரிழக்கிறார்.

இதன்பின், இதுவரை அந்த குற்றம் குறித்து கண்டறிய உதவிய ஈரோடு மகேஷ் மரண மேடையில் நிற்க, இந்த கொலைகளை செய்வது யார் என்பது தெரியாமல் கணேஷ் குழம்பி நிற்கிறார்.

மகேஷை காப்பாற்றுவதற்காக கணேஷ் வெங்கட்ராம் எடுக்கும் முயற்சிகள் பலிக்காமல், ஈரோடு மகேஷ் இறந்துவிடுகிறார். அடுத்ததாக மரண மேடைக்கு ஸ்வேதா மேனன் செல்கிறார்.

இறுதியில் ஸ்வேதா மேனனை கணேஷ் வெங்கட்ராம் மீட்டாரா? இந்த சம்பத்திற்கு காரணம் யார்? என்பது படத்தின் மீதிக்கதை.

பொதுவாக போலீஸ் அல்லது ராணுவ வேடத்திலேயே அதிகளவில் நடித்திருக்கும், கணேஷ் வெங்கட்ராம், இப்படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்வேதா மேனன் தனது முதிர்ந்த நடிப்பால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அழகான போலீஸ் அதிகாரியாக திரையில் ரசிக்க வைக்கிறார்.