சென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். கலையரசனின் தங்கை தனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளுடைய மருத்துவ படிப்புக்கு அனுமதி தேடி கலையரசன் அலைகின்றனர். ஒருவழியாக தன்னுடைய தங்கையின் மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு தரகர் மூலமாக ரூ.53 லட்சம் நன்கொடையாக கொடுத்து அந்த கல்லூரியில் தன்னுடைய தங்கைக்கு அனுமதி பெறுகிறார் கலையரசன்.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே, அந்த கல்லூரிக்கு ‘இந்திய மருத்துவ சங்கத்தின்’ லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக தான் கொடுத்த நன்கொடை பணத்தை திரும்ப தர கேட்டு, கல்வி நிர்வாகத்திடமும், தரகரிடமும் முறையிடுகிறார் கலையரசன். பிரச்சனை முற்றுகிறது, தரகர் தற்கொலை செய்து கொள்கிறார், தங்கை விபத்தில் இறந்து விடுகிறார். மேலும் இது திட்டமிட்ட கொலை என்றும், புரோக்கர்தான் காரணம் என்றும் அவர்களை பழிவாங்க எண்ணுகிறார். ஆனால், போலீஸ் எல்லாம் அவர்கள் பக்கம் சாதகமாக இருப்பதால் பலன் கிடைக்காமல் போகிறது.தன் தங்கைக்கு நேர்ந்த இந்த நிலைமை, வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்து கல்லூரியில் சேர்வதற்காக பணம் வாங்கும் கும்பலுக்கு எதிராக போராடுகிறார் கலையரசன். இறுதியில் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கலையரசன், தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் இப்படத்தில் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அதேபோல் வில்லனாக நடித்திருக்கும் கெளதம். ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி அவர்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். தரகர்களாக வலம் வரும் சரிதிரன், வினோத் என அனைவரும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எடுத்து அதை படமாக்கி சரியான நேரத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். முதல் படத்திலேயே சமூக அக்கறை உள்ள கதையை எடுத்து இயக்கியிருப்பது சிறப்பு.