சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட சங்கமித்ரா படம் கான்ஸ் பட விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நாயகர்களாக நடிக்கின்றனர். வீரமும், தீரமும் நிறைந்த வீர மங்கையாக நாயகி ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்தில் வால்வீச்சில் வல்லமை கொண்ட வீரமங்கை பாத்திரத்தில் நடிப்பதற்காக லண்டனில் ஸ்ருதி ஹாசன் விஷேச பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் அதன் வரலாற்று கதைக்களத்திற்காக ஏற்கனவே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், வரும் 18 ம் தேதி நடைபெறும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற 70 வது கான்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாளில், சங்கமித்ரா திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர்.சி, நாயர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, நாயகி ஸ்ருதி ஹாசன், தயாரிப்பாளர்கள் நாரயணன் ராம்சாமி, ஹேமா ருக்மணி, புரெடக்ஷன் டிசைனர் சாபு சிரில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கான்ஸ் திரைப்பட விழா மூலம் சங்கமித்ரா படத்தை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். படத்தின் கதை தேசிய மற்றும் சர்வதேச ரசிகர்களை ஈர்க்க கூடியது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், படத்தின் துவக்கத்தில் சர்வதேச ரசகர்களின் பங்கேற்பை பெறுவது உற்சாகமானது என்றும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.