மூன்று மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு – பிரபாஸ் நடிக்கும் சாஹூ

இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாஹுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “சாஹூ” மூலம் தயாராகிவிட்டார்.

பாஹுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளில் இறங்கிவிட்டார்கள். பாஹுபலியில் தன்னுடைய முக்கிய பங்களிப்பின் மூலம் இன்று எல்லா தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்ட பிரபாஸ், திரைத்துறை, ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் கூட அவரது அடுத்த படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையொன்றுமில்லை.

பாஹுபலியில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட அக்கறையும், கடின உழைப்பும், மகத்தான முயற்சிகளும், முன்னேற்பாடுகளும் பாஹுபலி 2 பற்றிய ஆவலையும் எதிர்பார்ப்புகளையும் மிகவும் அதிகப்படுத்தியுள்ளன. ஆனால், சாஹூவில் நீங்கள் சந்திக்க இருக்கும் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்டவர். ஒரு வித்தியாசமான பின்புலத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், வித்தியாசமான கதைகளத்தில் ஒரு புதிய வடிவத்தில் உருப்பெற்று வருகிறது. பிரம்மாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும் காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்துப் பிரமாதமாக உருபெற்றுள்ளது.

“சாஹூ” ஒரு புதுமையும், ரசனையும் உற்சாகமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பு. இந்திய திரையுலகின் பல பெரிய முன்னணி நடிகர் நடிகைகளும் இதில் பங்கு பெறுவது மேலும் ஆவலை கூட்டுகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக, பல புதிய இடங்களில் படம்பிடிக்கபட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் சுஜீத் இயக்க, வம்சி மற்றும் பிரமோத் அவர்களின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளை, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது. மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை அதிகபடுத்தியுள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் சாஹூ தொடர்ந்துப் படமாக்கப்பட்டுவரும் நிலையில், பிரம்மாண்டமாய் அதிக திரையரங்குகளில் அடுத்த வாரம் வரவிருக்கும் பாஹுபலி 2 படத்துடன் நீங்கள் சாஹூவின் டீஸர் காணலாம்.

சாஹூ ஒரு மிகப்பெரிய அளவில், வானளாவிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. நினைவிருக்கட்டும் ஏப்ரல் 28 ல் சாஹூ டீஸர்!!