‘வில் அம்பு’ படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கி வரும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘மெட்ரோ’ புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மேலும் அவரது இசையில் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்திற்காக சிலம்பரசன் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த படத்தில் ரங்குஸ்கி (பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் செல்ல பெயர்) என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கின்றேன். நகர்ப்புற பெண் வேடத்தில் நான் நடிக்கும் இந்த கதாபாத்திரம், நான் நடித்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ‘ராஜா’ கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகன் ஷிரிஷ், எனக்கு பல விதங்களில் உறுதுணையாய் இருப்பது மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் பக்கபலமாய் இருக்கின்றார். நிச்சயமாக ராஜா ரங்குஸ்கி, அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற சாந்தினி தமிழரசன்.