பாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை படைக்கும் நோக்கில் மாபெரும் நிகழ்வொன்றை ஏற்படுத்தி உள்ளோம்.
வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.
பரதக்கலை தோன்றியது எப்படி
பரதநாட்டியம் : தென்னிந்தியாவில் சிறப்பாக கருதப்படும் பரதநாட்டியம் தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நடனமாகும். இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பரதக்கலையானது புராண ரீதியாக பரத முனிவரால் உருவாக்கப்பட்டு, பரதம் என்ற பெயர் தாங்கி வலம் வருவதாகக் கூறப்படுகிறது.
ப: பாவம், ர: ராகம், த: தாளம் என்ற மூன்றும் சேர்ந்த கலை வடிவம் பரத நாட்டியம் என்பதையே பரதம் என்ற சொல் குறிக்கிறது.
வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் ஆதிகாலம் முதலே தமிழகத்தில் இருந்து வருகிறது. கூத்து, ஆடல், நாட்டியம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 100 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக் கோவில்களிலும் அரச சபைகளிலும் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரதநாட்டியம் ஆகும். நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞர்கள் தங்களுடைய முகபாவனைகளில் நவரச உணர்வுகளை வெளிக்கொண்டுவருவதே இக்கலையின் உலகப் புகழுக்குக் காரணம் ஆகும். மேலும் பரதக் கலைஞர்கள் தங்கள் கை, கால், மற்றும் விரல்களின் உதவியுடன் அபிநயங்கள் மற்றும் முத்திரைகள் மூலமாக முழுநீள கதைக்கும் அதற்குண்டான சுற்றுச் சூழலை விளக்கும் லாவகமும், காண்போரைக் கவர்ந்திழுக்கும் ஒப்பனையும், ஆடை அணிகலன்களும் இன்று வரை மேலை நாட்டவரையும் வியக்க வைக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.
சிவபெருமானிடம் இருந்து தோன்றியதுதான் பரதநாட்டியம் என்றும் இதிகாசங்களில் கூறப்படுகிறது. இவர் இடுகாட்டில் கைகொட்டிச் சிரித்துக்கொண்டு உக்ரமாய் ஆடிய ஆட்டமே பிற்காலத்தில் பரதக்கலையாக மாறியது. இவரே நடனத்திற்கு முன்னோடி என்பதால் நடராஜர் என்று அழைக்கப்பட்டார்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் நடராஜர் வடிவத்தில் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.
பரதக் கலையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை திருமிகு. ருக்மணிதேவி அருண்டேல் அவர்களையே சேரும். மேலும் இக்கலையை வளர்ப்பதற்காகவே சென்னையில் கலா ஷேத்ரா என்ற கலைக் கூடத்தை நிறுவினார். இங்கே நடனம் பயின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று உலகம் முழுவதும் சென்று பரதக் கலையின் சிறப்பைப் பறை சாற்றி வருகின்றனர்.
பாடல், நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், மிருதங்கம் மகுடி, ஹார்மோனியம், வயலின், ஆகிய இசைக்கலைஞர்களின் துணையோடும் துல்லியமான அடவுகளுடனும், தாளத்தோடு கூடிய ஜதிகளுடனும் நடனத்திற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள், அணிகலன்கள் கால் சலங்கைகள் போன்றவற்றை அணிந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் பரதநாட்டியக் கலைஞர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளை வழங்கி நம் இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க நடனத்தை பாதுகாத்து வருகிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த பரதநாட்டியக் கலையை பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் ‘பந்தநல்லூர் பாணி’, ‘வழுவூர் பாணி’, ‘தஞ்சாவூர் பாணி’, ‘மைசூர் பாணி’, ‘காஞ்சிபுரம் பாணி’ உள்ளிட்டவை அடங்கும். இக்கலையை பயிற்றுவித்தவர்களில் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையை சேர்ந்த பொன்னையா, வடிவேலு, சிவானந்தம், சின்னய்யா ஆகியோர் தஞ்சாவூர் பந்து என புகழ் பெற்றனர். பின்னர் வந்தவர்களில் வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாத பிள்ளை, தனஞ்ஜெயன், அடையாறு லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
தமிழ்த் திரையுலகிலும் பரதநாட்டியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படங்களும், பாடல் காட்சிகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் வஞ்சிக்கோட்டை வாலிபன், தில்லானா மோகனாம்பாள், பாட்டும் பரதமும், சலங்கை ஒலி, காதல் ஓவியம், வைதேகி காத்திருந்தாள் ஆகிய படங்கள் பரத நாட்டியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தன. நமது பரதக்கலையின் மேம்பாட்டை உலகெங்கும் பரப்புவதற்கு புதிய முயற்சியாகவும் இக்கலையின் அருமை பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து அதை ஆர்வத்தோடு பயிலவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஒரு மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.
நாட்டியக்கலைஞர் திரு. அதிர்ஷ்ட பாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட 26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் ஒன்று கூடி நடனமாட உள்ளனர்.
பரத மாமேதை நாட்டியப் பேரரசி, பத்மபூஷண் திருமதி. பத்மா சுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்க உள்ளார். மேலும் பரத நாட்டியக் கலைஞர்களும், திரைப்பட நடன இயக்குநர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
இந்நிகழ்வில் நடனமாடுவதற்கு பதிவு செய்த கலைஞருக்கு 26 நிமிடங்களுக்கான பாடலும், அப்பாடலுக்கு நடனக் கலைஞர் ஒருவர் ஆடுகின்ற ஆடல் வடிவமும் பதிவு செய்யப்பட்ட காணொளித்தட்டு (டிவிடி)
வழங்கப்படும். இந்த காணொளியைப் பார்த்து பயிற்சி செய்து கலைஞர்கள் இந்நிகழ்வில் ஆடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நடனப் பள்ளி ஆசிரியர்களும், நடனப் பள்ளி இயக்குநர்களும் பல்வேறு வகையில் பணியாற்றி வருகிறார்கள்.
வெளியூரிலிருந்து வருகின்ற கலைஞர்களுக்கு தங்கும் இடவசதியும், பயிற்சி செய்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5000 கலைஞர்கள் பங்கேற்க இருக்கும் ”கின்னஸ் உலகசாதனை” நிகழ்வென்பதாலும், 5000 கலைஞர்களின் பெற்றோர்கள், 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட நடனப்பள்ளிகளின் இயக்குநர்கள், 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பு செய்ய உள்ளதாலும் இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக்கழகம், லஷ்மன் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுவனங்கள் இரண்டு மாத காலமாக செய்து வருகின்றனர்.
இது தொடர்பான செய்தியை தங்கள் மேலான ஊடகம் வாயிலாக உலகம் முழுவதும் கொண்டு செல்ல தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்க விரும்பும் நடன கலைஞர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 98404 80791 / 96775 00442 / 044 – 24747206.
வேல்ஸ் பல்கலைகழகத்தில் பதிவு செய்ய: 98410 72593, 98947 15465
ஆன்லைனில் பதிவு செய்ய: www.lakshmansruthi.com
நிகழ்ச்சியில் உபயோகிக்கப்பட உள்ள பாடல் மற்றும் நடன அமைப்பு பற்றிய விளக்க வீடியோவை காண பின் வரும் யூ டியூப் இணைப்பை பார்வையிடவும்… https://youtu.be/gEAwQKPL6j8
நன்றி !
இவண்:
வேல்ஸ் பல்கலைகழகம்
லஷ்மன்ஸ்ருதி
விசாகா மீடியா