குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை !
மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளை: குழந்தைகளே தொடங்கி வைத்தனர்.!
குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்”நாரோ மீடியா ” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.
இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். நிசப்தம் படம் பார்த்த குழந்தைகளும் பெற்றோரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சொல்லத் தயங்கும் பல நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த மனிதம் ஃபவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதன் நோக்கம் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான விழிப்புணர்வு பெற வைப்பதாகும்.
படம் பார்த்த பின்னர் குழந்தைகள், மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளையின் லோகோவை அறிமுகப்படுத்தினர். அப்போது, நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு நாசர், முதன்மை செயல் இயக்குநர் செல்வி பிரபாலா சுபாஷ் ஆகியோரும், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஒருங்கிணைப்பினை மக்கள் தொடர்பாளர்களான திரு ஜான் மற்றும் திரு யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.