எங்கள் விழித்திரு திரைப்படத்தின் ஆறு பாடல்களை ஏழு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர் – சத்யன் மகாலிங்கம்

கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இந்த படத்தின் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கமும், பிண்ணனி இசையை இசையமைப்பாளர் அச்சுவும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை இசைக்கருவியை நாங்கள் ‘விழித்திரு’ படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ் எஸ் தமன், சி சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் விழித்திரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு நாங்கள் ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம். அது தான் சந்தோஷ் நாரயணன் பாடி இருக்கும் ‘பொன் விதி’ பாடல்” என்று உற்சாகமாக கூறுகிறார் விழித்திரு படத்தின் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம்.