மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியிட தடை நீடிக்கிறது

அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிட தடை விதித்தது!

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை சிவபாலன் பிக்சர்ஸ் டாக்டர் சிவபாலன் வாங்கியிருப்பதாகவும் தடைகளையெல்லாம் தாண்டி நாளை வெளியிடப்போவதாகவும் விளம்பரங்கள் தந்து வருகிறார்கள். இந்நிலையில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை தன்னிடம் விற்றதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் வரை படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிட தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு பிலிம்ஸ் சார்பாக இன்று பிரஸ் மீட்டில் பேசிய சிங்காரவேலன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சற்று பண நெருக்கடி ஏற்பட்டது. நான் அவருக்கு நெருக்கமாக இருந்ததால் என்னிடம் வந்து கடனாக பணம் கேட்டார் மதன். படத்தின் மீது ஏற்கனவே நிறைய கடன்கள் இருந்ததால் நான் பணமாக தர முடியாது. பதிலாக தமிழக உரிமையைத் தந்தால் தருகிறேன்’ என்று சொல்ல அதற்கு ஒப்புக்கொண்டார் மதன்.

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை 13 கோடி ரூபாய்க்கு விலை பேசி அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டோம். ஒன்றரை கோடியை ரொக்கமாகவும் 50 லட்சத்தை ஆன்லைன் மூலமாகவும் அட்வான்ஸாக மதனிடம் வழங்கினேன். அதற்கான ஒப்பந்தம் என்னிடம் உள்ளது.

திடீரென்று 2016 தமிழ் புத்தாண்டு அன்று சிவபாலன் பிக்சர்ஸ் வெளியீடு என்று விளம்பரம் வந்தது. உடனடியாக மதனிடம் முறையிட்டேன். அவரோ என்னை சமாதானப்படுத்தி எனக்கு தான் தமிழக உரிமை என்று உறுதியளித்தார். சிவபாலன் மதனின் பினாமியாக செயல்படுபவர் என்பதால் நம்பினேன்.

திடீரென்று மதன் மாயமானதால் குழம்பிப்போனேன். காவல்துறை விசாரணையில் கூட இதை முறையிட்டேன். படத்தை வெளியிட முயற்சித்தார்கள். பிப்ரவரி 24 வெளியீடு என்று விளம்பரம் வந்தது. அதில் சிவபாலன் பிக்சர்ஸ் என்றே விளம்பரம் வந்ததால் நான் நீதிமன்றத்தை அணுகினேன்.

பிப்ரவரி 22 அன்றே நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கிவிட்டோம். மதனோ, இல்லை வேறு யாராரக இருந்தாலும் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. போத்ரா படத்தின் மீது தொடர்ந்த வழக்கு போய்க்கொண்டிருந்ததால் நான் பொறுமையாக இருந்தேன். இப்போது இந்த தகவல்களை வெளியிடுகிறேன்’ என்றார்.

பிப்ரவரி 22 அன்று விதித்த தடையை மார்ச் 8 அன்று மதன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்று இருப்பதால் இந்த விசாரணை வேறு ஒரு நாளிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே படத்தை வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று படத்தை வெளியிடும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.