குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ

சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் குழந்தைகளின் நலனுக்காக சுமார் 50 வருடமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிறுவனம் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு மேல் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள் ‘பயணம்’ என்னும் இசை வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பெண் குழந்தைகளும், படிக்கும் போது பல கனவுகளோடு தான் வாழ்கிறார்கள். அந்த கனவுகள் ‘குழந்தை திருமணம்’ மூலம் சிதைக்கப்படுகிறது.

‘பயணம்’ என்ற இசை வீடியோவில், டாக்டர் கனவுவோடு இருக்கும் பள்ளி மாணவி, ‘குழந்தை திருமணம்’ செய்து வைக்கப்படுகிறாள். தாயின் அன்பு முழுமையாக கிடைக்கும் முன்பே அந்த பெண் தாயாக மாறுகிறாள். இதன் பின், அந்த பெண்ணின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பற்றி உருவாக்கியிருக்கிறார்கள்.

உலகத்திலேயே குழந்தை திருமணத்தில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த ‘பயணம்’ என்னும் இசை வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பார்த்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘பயணம்’ என்ற இசை வீடியோவை பார்த்தேன். குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த ‘பயணம்’ இசை வீடியோ உருவாகியுள்ளது. சிறப்பாக உருவாக்கிய இந்த குழுவிற்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.

நடிகை மகிமா கூறும்போது, ‘பயணம்’ இசை வீடியோ சிறப்பாக இருந்தது. ஒரு பெண் எவ்வளவு தடைகளை கடந்து வருகிறாள் என்று எனக்கு தெரியும். எனக்கு நல்ல ஒத்துழைப்பு உள்ள குடும்பம் கிடைத்ததால் என்னால் சாதிக்க முடிந்தது. குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘பயணம்’ பார்த்து கண் கலங்கினேன்’ என்றார்.

இயக்குனர் ரவி அரசு பேசும்போது, ‘பயணம்’ இசை வீடியோவை பார்த்தேன். குழந்தை திருமணத்தால் நிறைய பாதிப்புகள் இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து, முறையான திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும். குழந்தை திருமணத்தை அறவே ஒழிக்க வேண்டும்’ என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ‘பயணம்’ இசை வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள். வட இந்தியாவில், தென் தமிழ்நாட்டில் இது போன்ற குழந்தை திருமணம் நடந்து வருகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். இந்த மாதிரி முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.

நடிகர் ராமதாஸ் கூறும்போது, ‘நான் சிறுவதில் இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்களுக்கு 14 வயதில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணம் ஏற்க முடியாத விஷயம். இன்னும் கிராமங்களில் நிறைய நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். பெண்களை நிறைய படிக்க வைத்து, பொது அறிவு நிறைய கொடுத்து பின்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் பேசும்போது, ‘பயணம்’ என்ற இசை வீடியோவை பார்த்தேன். பயணம் என்ற நான்கு எழுத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காண்பித்திருக்கிறார்கள். 16 வயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இது கிராமப்புறங்களில் அதிகமாக நடந்து வருகிறது. பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என்னை பொருத்தவரை பெண்களை நான் இறைவனாக பார்க்கிறேன். பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க கூடாது. இந்த குழுவிற்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.