“விழித்திரு படத்தின் கதையை கூட கேட்காமல், என் மீது இருக்கும் நம்பிக்கையால் இந்த படத்தை வாங்கி இருக்கிறார் விடியல் ராஜு சார்” என்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்

கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

‘விழித்திரு’ திரைப்படத்தில் டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.சத்யா,அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள் இந்த ‘விழித்திரு’ படத்தில் ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மில்டன், ஆர்.வி,சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ‘விழித்திரு’ படத்திற்கு படத்தொகுப்பாளராக கே.எல். பிரவீன், கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி, ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

“ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்பதையும், அவர்கள் எடுக்கும் முயற்சிகளை பற்றியும் நான் என்னுடைய விழித்திரு திரைப்படம் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன். பொதுவாகவே பகல் நேர படப்பிடிப்பை விட இரவு நேர படப்பிடிப்புக்கு தான் நேரமும் காலமும் அதிகமாக தேவைப்படும். 100 நாட்கள் பகலில் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு நேரம் தேவை படுமோ, அதே நேரம் தான் நாங்கள் 10 நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்த தேவைப்பட்டது. நிச்சயமாக எங்களின் இந்த கடின உழைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். முத்துக்குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, அவரின் சவாலான காட்சிகளுக்கு டூப் எதுவும் போடாமல் நடித்திருக்கிறார். விழித்திரு படத்தின் ஒரு காட்சியை கூட பார்க்காமல், என் மீதும் என் குழுவினரின் மீதும் முழு நம்பிக்கை வைத்து, இந்த படத்தை வாங்கிய விடியல் ராஜு சார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

“இந்த தருணம் வரை நான் விழித்திரு படத்தின் கதையயை பற்றி மீரா கதிரவனிடம் கேட்டது இல்லை. ஏனென்றால், நான் ஏற்கனவே விழித்திரு படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த் மூலமாக, இந்த தனித்துவமான கதையம்சத்தின் சிறப்பை பற்றி நன்கு அறிவேன். டி ஆர் சாரின் ஆற்றல் மிகுந்த நடிப்பாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்ற ஒரு படமாகவும், வர்த்தக ரீதியாக வெற்றி பெற கூடிய ஒரு திரைப்படமாகவும் எங்களின் விழித்திரு இருக்கும்” என்று ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் நம்பிக்கையுடன் கூறுகிறார் விடியல் ராஜு.