‘வணக்கம் சென்னை’ படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது சமூதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, ‘சதையை மீறி’ என்னும் மியூசிக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி . கிருத்திகா உதயநிதி இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த ‘சதையை மீறி’ மியூசிக் வீடியோவை தயாரிப்பதில் பக்கபலமாய் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விவேக் வேல்முருகனின் வரிகளில் தோன்றி இருக்கும் இந்த ‘சதையை மீறி’ மியூசிக் வீடியோவில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. இந்த மியூசிக் வீடியோவை 11.02.17 அன்று இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார்.
“நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து கேட்பது அன்பு ஒன்றை மட்டும் தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் புறக்கணிப்பு என்பது மிக பெரிய தண்டனையாக இருக்கும். அத்தகைய தண்டனையை அனுபவித்து வரும் அவர்களுக்கு நாம் ஏன் நம்முடைய அன்பை பகிர்ந்து கொள்ள கூடாது? 12 திருநங்கைகளின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘சதையை மீறி’ பாடல், நாம் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க உதவும்” என்று கூறுகிறார் கிருத்திகா உதயநிதி.