அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான ‘வம்சம்’ முதல் ‘ஆறாது சினம்’ திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ‘இரவுக்கு’ தான் ‘ஆயிரம்’ ‘கண்கள்’ இருக்கின்றது. எங்கள் படத்திற்கும், இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதால், நாங்கள் இந்த படத்திற்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தலைப்பு வைத்துள்ளோம். ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு எங்களின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ கதை நகர்வதால், விறுவிறுப்பிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது.

ஒரு நடிகர் என்பதை தாண்டி, அருள்நிதி சாரை ஒரு உன்னதமான மனிதனாக நான் அதிகமாக ரசிக்கிறேன். அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. எனக்கு ஒரு வலுவான நம்பிக்கையை கொடுத்து, எனக்கு உறுதுணையாய் இருந்து வரும் தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கின்றோம். படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பற்றிய தகவல்களை இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் தெரிவிப்போம்” என்று கூறுகிறார் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு மாறன்.

Previous articleVivekananda Navaratri Day 4 Photos
Next articleஇதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது ‘காஸி’