சந்தானத்தின் வர்த்தக அந்தஸ்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அவரது நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்த படத்தின் டீசரை சிலம்பரசன் அவருடைய பிறந்த நாளான 3.2.2017 அன்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்கள் மட்டுமின்றி வர்த்தக உலகினர் மத்தியிலும் அமோக வரவேற்பை இந்த ‘சர்வர் சுந்தரம்’ டீசர் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
‘கெனன்யா பிலிம்ஸ்’ சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில், வைபவி ஷண்டிலியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி இருக்கின்றனர்.
“பல ஆண்டுகளாக சிலம்பரசன் – சந்தானம் இடையே இருந்து வரும் நட்புறவை பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த தருணத்தில் சிலம்பரசன் அவர்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட்டிருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இதைவிட பெருமை என்ன இருக்கின்றது?. இதை டீசர் வெளியீடு என்று சொல்வதை விட, நட்புறவின் கொண்டாட்டம் என்றே சொல்லலாம். வெளியான சில மணி நேரங்களிலேயே எங்களின் டீசர் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது எங்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.