இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்க இருக்கும் திரைப்படம் ‘நகல்’. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த ‘நகல்’ படத்தை ‘கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா, இசையமைப்பாளர் ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் லோகேஷ், கலை இயக்குநர் ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் மற்றும் டிசைனர் ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘நகல்’ படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். இந்த ஒற்றை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.
“ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த ‘நகல்’. ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், ‘நகல்’ படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது. தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக ‘நகல்’ இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் நான் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன். தற்போது படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பொருட்டு, சில முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் ‘நகல்’ படத்தின் கதாநாயகியை நாங்கள் முடிவு செய்துவிடுவோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘நகல்’ படத்தின் இயக்குநர் சுரேஷ் எஸ் குமார்.