“ஜெயம் ரவி சாரும், அரவிந்த் சுவாமி சாரும் எனக்கு சிறந்ததொரு ஆசானாக இருந்து என்னை ஊக்குவித்தனர்” என்று கூறுகிறார் – வருண்

212

‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர் வருண் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ‘போகன்’ படத்தில் நடிகர் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘போகன்’ படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது, எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த் சுவாமி சார் ஆகியோரோடு இணைந்து நடிப்பது சற்று பதட்டமாக தான் இருந்தது. ஆனால் நாளடைவில் அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் என்னை பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டது. நான் நடித்த காட்சிகள் சிறப்பாக அமைய, அவர்கள் இருவரும் என்னோடு உடன் இருந்து வழி நடத்தியது மட்டுமில்லாமல் எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும் இருந்து என்னை ஊக்குவித்தனர்

இயக்குநர் லக்ஷ்மன் சார் என்னுடைய கதாபாத்திரத்திற்காக, ஒரு தனித்துவமான நடை பழக்கத்தை எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். அதற்கான காரணத்தை ‘போகன்’ திரைப்படத்தை பார்த்த பின்பு ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வருவதை நான் பெருமையாக கருதுகிறேன். வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி, என்னுடைய கலை பயணத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் வருண்.

Previous article‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது
Next articleNisaptham Audio Launch Stills