ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் “சாகாவரம்” இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் விபத்து நேர்ந்தவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை எங்கள் சாகா அறக்கட்டளை மூலமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். மேலும் ஒருவர் இறந்த பின்பும் அவர் உடலில் உள்ள பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பதையும், இறப்பின் பின்பும் உடல் தானத்தால் நாம் வாழலாம் என்ற உன்னத கருத்தையும் அனைவரின் மனிதிலும் விதைக்கின்றோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மருத்துவர்கள், அதனால் இங்கு பயிற்சிக்கு வரும் யாவரையும் ஒரு சமுக மருத்துவராக மாற்றி மற்றவர்களுக்கு உதவி செய்யும் படி உரிய பயிற்சிகள் அளிக்கின்றோம்” என்றார்.
நடிகர் சாருஹாசன் அவரின் மனைவி கோமளம் சாருஹாசன், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகிய நால்வரும் உடல் தானம் செய்வதாக இவ்விழாவின் போது அறிவித்தனர். இத்துடன் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவரது மனைவி பிரபா நிகில் முருகனும் உடல்தானம் செய்வதாக அறிவித்தனர்.
விழாவில் நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு பாக்யராஜ், சினேகா, சுஹாசினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குனர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.