தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது – காயத்ரி

பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்…

பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல்

சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது.

கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு.

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும்,
குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’

பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.

போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ”எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்” என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படி படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்கு சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன் என்கிறார் இயக்குநர் வி எஸ் பழனிவேல்.

படத்தில் புதுமுகம் சந்தோஷ் கண்ணா , டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின். சோனியா அகர்வால் அதிரடி நாயகியாக நடித்துள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், கொட்டாச்சி, Y.G.மகேந்திரன், பாய்ஸ் ராஜன், பயில்வான்,
நெல்லை சிவா, மனோகர், பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.

இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் என கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார்.

நாயகி காயத்ரி கூறும்போது, நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது, பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது. இன்னும் இதுபோன்ற சவாலான வேடங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாக கிடைத்தால் நடிப்பின் மூலம் சமூகத்திற்கும் பயனுள்ள செய்திகளை சொல்ல முடியும். இந்த கேரக்டரை எனக்குத் தந்த இயக்குநருக்கு என் நன்றிகள் என்றார்.

தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது சாயா.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெயிடுகிறார் V.S. சசிகலா பழனிவேல். பிப்ரவரி 3 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது சாயா திரைப்படம்.

இசை: ஜான் பீட்டர்

கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை: V.S. பழனிவேல்

சண்டை: பவர் பாஸ்ட்

டான்ஸ்: ரமேஷ் கமல்

தயாரிப்பு மேற்பார்வை: மதுபாலன்

மேனேஜர்: ஆத்தூர் ஆறுமுகம்

தயாரிப்பு : V.S. சசிகலா பழனிவேல்
பி.ஆர். ஓ : A. ஜான்