கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார்

163

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இம்மாதம் 28ஆம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வோராண்டும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொள்கிறார்கள். டெல்லி சாகித்ய அகாடமியுடன் இணைந்து துஞ்சன் அறக்கட்டளை இவ்விழாவை நடத்துகிறது.
இந்த ஆண்டு துஞ்சன் இலக்கியத் திருவிழாவைக் கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார். இந்திய இலக்கியத்தில் பன்முகப் பண்பாடு என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிறுகதைகள் நூல் அதே மேடையில் வெளியிடப்படுகிறது.

நான்கு நாட்களின் விழாவில் டெல்லி சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.சீனிவாச ராவ், சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளர் எஸ்.பி.மகாலிங்கேஸ்வர், கேரளப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.முகமது பஷீர், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அமித் மீனா மற்றும் மலையாளம் – தமிழ் – இந்தி – ஒரியா – வங்காளம் – கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்தாளர்களும் பங்குபெறுகிறார்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகக் கவிஞர் வைரமுத்து ஜனவரி 28ஆம் தேதி காலை விமானத்தில் கோழிக்கோடு புறப்படுகிறார். மறுநாள் பிற்பகல் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

Previous articleKaabil Movie Review by Jackiesekar
Next articleAdhe Kangal Movie Review By Jackie Sekar