இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டு, ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் ‘தாயம்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் ‘தாயம்’ படத்தை ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் ஏ ஆர் எஸ் சுந்தர். திரு இணைத்தயாரிப்பு செய்திருக்கும் இந்த ‘தாயம்’ படத்திற்கு, பல குறும்படங்களுக்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தாயம் படம் முழுவதும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பதால், அதற்கு இசை அமைப்பது என்பது சவாலாக இருந்தது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் படத்தின் பாணி மாறி கொண்டே இருக்கும் என்பதால் பின்னணி இசையில் அதிக கவனம் தேவைப்பட்டது. இசை என்பதை தாண்டி படத்தோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே பின்னணி இசை இருக்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். ஒரு தாய கட்டையில் இருக்கும் நான்கு பக்கங்களை போல ‘தாயம்’ படத்தில் இருக்கும் நான்கு பாடல்களும் கதையை மென்மேலும் வலுப்படுத்தும்.
‘தாயம்’ படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி மற்றும் ரெகார்டிங் வேலைகள் எல்லாம் மாசிடோனியா நாட்டிலும், பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற FAMES ஸ்டுடியோவிலும், பிரம்மாண்ட இசை குழுவினருடன் நடைபெற்றது. இந்த ஸ்டுடியோவில் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் ரெகார்ட் செய்ய பட்டிருக்கிறது. ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதைவிட பெருமை என்ன இருக்கின்றது. இப்படிப்பட்ட அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த, என்னுடைய தயாரிப்பாளர்கள் ஏ ஆர் எஸ் சுந்தர் மற்றும் திரு ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ‘தாயம்’ திரைப்படத்தை காண வரும் ரசிகர்களின் மனதில், படம் முடிந்த பின்பும், பின்னணி இசையின் தாக்கம் நீடித்து கொண்டே இருக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம்.