ஆரம்பத்தில் ஐ டி ஊழியராக பணிபுரிந்து, அதற்கு பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி, தற்போது சமீபத்தில் வெளியாகிய ‘மோ’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார், ‘மோ’ படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும், தன்னுடைய முதல் படத்திலேயே சுரேஷ் ரவி பெற்று இருப்பது மேலும் சிறப்பு. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த திறமையான நடிகர்கள் வரிசையில், தற்போது சுரேஷ் ரவியும் இணைந்து இருக்கிறார் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“தொடர்ந்து பேசி கொண்டே இருக்கும் ஒரு தொகுப்பாளராக தான் ரசிகர்கள் இதுவரை என்னை பார்த்து இருக்கிறார்கள். அதனால், என்னுடைய முதல் படத்தில் அந்த சாயல் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்து, நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதையம்சங்களில் கவனம் செலுத்தினேன். அந்த வகையில், ‘மோ’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் எல்லோரிடத்திலும் நல்லதொரு வரவேற்பை பெற்று வருவது, மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது போன்ற நல்லதொரு துவக்கத்தை எனக்கு அமைத்து தந்த என்னுடைய தயாரிப்பாளர்கள் ரோஹித் ரமேஷ் – ஹரி கிருஷ்ணா, இயக்குநர் புவன் மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீ ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே நடிப்பின் மீது எனக்கு அதிகமான ஈர்ப்பு உண்டு. சரியான கதைக்களத்தில் பணியாற்ற வேண்டும் என்கின்ற என்னுடைய 8 வருட கனவு, தற்போது ‘மோ’ திரைப்படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. என்னுடைய அடுத்த திரைப்படம், ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில், நட்பு மற்றும் நகைச்சுவை பின்னணியில் உருவாகும் ‘அதி மேதாவிகள்’. நடிப்பில் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை என் மனதில் விதைத்தவர் ரஞ்சித் மணிகண்டன். ‘மோ’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நான் இந்த அதி மேதாவிகள் படத்தில் நடிக்கிறேன்.” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘மோ’ படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி.