முழுக்க முழுக்க ‘செல்பி’ என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் ‘மியாவ்’ திரைப்படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் , மியாவ் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது.
“மியாவ் படத்தின் ‘இங்கி, பிங்கி பாடல் தற்போது யூடூபில் மூன்று லட்சம் பார்வையாளர்களை எட்டி இருப்பது, எங்கள் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது….இன்றைய காலக்கட்டத்தில், ‘செல்பி’ கலாச்சாரம் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது……அதுவும் ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயன் பேசிய ‘ஒய் செல்பி’ வசனம் மூலம் செல்பி கலாச்சாரம், தமிழக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாகிவிட்டது….எங்கள் மியாவ் படத்தின் பாடல்களை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….அந்த செல்பி போல், மியாவ் படத்தில் வரும் ‘செல்பி’ பூனையும் ரசிகர்கள் மத்தியில் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நல்ல வரவேற்பை பெறும்….” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் வின்சென்ட் அடைக்கலராஜ்.