குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’

கூர்மை, வேகம், வலிமை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நேரத்தில், குறி வைத்த இலக்கை தாக்குவது…..இவை யாவும் தான் தோட்டாக்களின் சிறப்பம்சம்…. அந்த தோட்டாக்களின் யுக்தியை கையாண்டு, தற்போது தங்களின் படப்பிடிப்பை குறி வைத்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கின்றனர்,  ‘8 தோட்டாக்கள்’ படக்குழுவினர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  தயாரித்து வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’ சார்பில்  இணை தயாரிப்பு செய்கிறார் ஐ பி கார்த்திகேயன்.  இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். முற்றிலும் திறமை படைத்த  புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்  ‘அவம்’, ‘கிரகணம்’ புகழ் கே எஸ் சுந்தரமூர்த்தி .
“துப்பாக்கியில் இருக்கும் ட்ரிக்கரை  அழுத்தினால் போதும், அதில் இருக்கும் தோட்டா இலக்கை நோக்கி சீறி பாயும்….. அதேபோல் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், உற்சாகமும் தான் எங்களுக்கு ட்ரிகராக செயல்பட்டு, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் நிறைவு  செய்ய உதவியாக இருந்தது…. ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக இறங்க கூடிய காட்சிகளை கொண்டு நாங்கள் எங்களின் ‘8 தோட்டாக்கள்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். மிக விரைவில் நடைபெற இருக்கும்  தொழில் நுட்ப  பணிகள், எங்கள் 8 தோட்டாக்களை மேலும் மெருகேற்றும்….” என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.