கோடிட்ட இடங்களாக இருந்த என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிரப்பியது என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்

237
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு மூல காரணமாக திகழ்வது, அந்த படத்தின் தலைப்பு தான்….அப்படிப்பட்ட தனித்துவமான தலைப்புகளை தன்னுடைய திரைப்படங்களுக்கு தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற கூடிய ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ‘சுகமான சுமைகள்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அடுத்த படைப்பான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. சாந்தனு – பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி’ மற்றும் ‘பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் சத்யா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஜனா, படத்தொகுப்பாளர் ஆர் சுதர்சன், கலை இயக்குநர் ஆர் கே விஜய் முருகன் மற்றும் நடன இயக்குநர் பிரபு தேவா என வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக…’ அந்த பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும்  இருக்கலாம்…. அது என்ன என்பதை ரசிகர்கள் தான் இந்த கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்….
நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாக தான் இருந்தது…. அந்த காலியான இடங்களை நிரப்பியவர் என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்…. அவருக்காக சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம் தான் இந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. மேலும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவருடைய திரையுலக வாழ்க்கையில் விடுபட்டிருக்கும் இடங்களை நிரப்பும் திரைப்படமாக எங்களின்  ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
Previous articleMusic Director Vidya Sagar Joined Thiruttuppayale – 2 Crew
Next articleKoditta Idangalai Nirappuga Press Meet Stills