‘வசூல் ராஜா MBBS’ திரைப்படத்தில் அறிமுகமாகி, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து, ‘சத்தம் போடாதே’ படத்தின் சைக்கோ வில்லனாக அனைவரையும் மிரட்டி, இயக்குநர் கார்த்திக் ராஜுவின் ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றவர், நடிகர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை இயக்க இருக்கிறார் அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம். இவர் இயக்குநர் – பிரபல வசன கர்த்தா விஜியின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள், 16.11.16 அன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்பட பூஜையில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் – டாக்டர் கே கணேஷ், இயக்குநர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், இயக்குநர் சரண், மனு, எஸ் பி பி சரண் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தயாரிப்பு துறையில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்திருக்கும் நிதின் சத்யாவை ஊக்குவிக்க, ஒட்டுமொத்த சென்னை 28 படக்குழுவினரும் திரண்டு வந்து, இந்த பூஜையில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. திகில் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படம், நிச்சயமாக நிதின் சத்யாவின் தயாரிப்பாளர் அவதாரத்திற்கு சிறந்ததொரு அடித்தளமாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
“திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது ‘ஃப்ரைடே (வெள்ளிக்கிழமை). அதனால் தான் எங்களின் நிறுவனத்திற்கு ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம்…. வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணி வேர்…. அத்தகைய தரம் வாய்ந்த படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்….இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தொழிலதிபர் ‘பிளாஸ்’ கண்ணனோடு கைக் கோர்த்து இருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. தரம் வாய்ந்த திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு உந்துதலாக இருப்பது அவர் தான்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறர் தயாரிப்பாளரும், ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனருமான நிதின் சத்யா