இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தான் காப்பியடித்து நான் டியூன் போடுகிறேன் இசையமைப்பாளர் பிரேம்ஜி

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. “ அச்சமின்றி “ என்ற படத்தை வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார். விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் H.வசந்தகுமார், தயாரிப்பாளர் வினோத்குமார், நடிகர் விஜய்வசந்த், பிரேம்ஜி, பிரேம், யுகபாரதி, இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, வெங்கட்பிரபு, நடிகர் பொன்வண்ணன், கிருஷ்ணா, மிர்ச்சி சிவா, வைபவ், தயாரிப்பாளர் கே.சுவாமிநாதன், தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். நடிகர் சௌந்தர், நடிகர் கும்கி அஸ்வின், சித்தார்த் விபின், இயக்குனர் மஞ்சப்பை ராகவன், நடிகர் நிதின்சத்யா, வசனகர்த்தா ராதாகிருஷ்ணா, நடிகை ரோகினி, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், நடிகர் அரவிந்த் ஆகாஷ், எடிட்டர் பிரவீன் கே.எல், அஜய் மாஸ்டர், கலை இயக்குனர் சரவணன், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், விஜி சதீஷ், இயக்குனர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசியதாவது…

இயக்குனர் ராஜபாண்டி ஏற்கனவே எடுத்த என்னமோ நடக்குது படத்திலும் என்னை நடிக்க வைத்தார். இந்த படத்தில் வழக்கமான எனது நடிப்பை மாற்றி இதுவரை நான் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இப்படிப் பட்ட வேடத்தில் நடிக்கிற பாக்யம் எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. எனக்கு கிடைத்தது. இந்த படத்தில் எப்படிப் பட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன் என்பதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் படம் வெளி வந்ததும் நான் மாறுபட்டு சிறப்பாக நடித்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரிய வரும். ராஜபாண்டி திறமையான இயக்குனர் இன்னும் பெரிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயரவேண்டும். அவருக்கு இருக்கும் ஆற்றலுக்கு நிச்சயம் அது நடக்கும் என்றார்.

விழாவில் நடிகர் பொன்வண்ணன் பேசியதாவது…

இந்த படத்தின் இயக்குனர் ராஜபாண்டி ஒரு சிறந்த இயக்குனர் ஒரு படத்தில் நடிக்க வரும் நடிகர்கள், நடிகையர்களை தங்களது இயல்பு நிலைகளில் இருந்து மாற்றி கதைக்கேற்ற கதாப்பாத்திரங்களாக கதைக்குள் கொண்டுபோய் நடிக்க வைப்பது எல்லா இயகுனர்களாலும் முடியாது. அந்த ஆற்றல் இயக்குனர் ராஜ்பாண்டியிடம் இருக்கிறது இவர் நிச்சயம் பெரிய இயக்குனராக வருவார் என்றார்.

விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது…

இயக்குனர் ராஜபாண்டி என்னை போலவே பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர். எனக்கு ஜூனியர். இவர் ஏற்கனவே எடுத்த படமும், இந்த படமும் இவரை பெரிய இயக்குனராக காட்டுகிறது.இன்றைய சூழ்நிலையில் சினிமாவிற்கு அண்ணாச்சி ( வசந்த்குமார் ) போன்ற தயாரிப்பாளர்கள் தேவை அவர்களைப் போன்ற தயாரிப்பாளர்களால் தான் ஒரு படத்தை சிறப்பாக எடுத்து முடித்து உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க முடியும். இன்று படம் எடுப்பது சுலபமாக இருக்கிறது. அதை திரையரங்குக்கு கொண்டு போய் சேர்ப்பது தான் போராட்டமாக இருக்கிறது. அதை இவரை போன்ற தயாரிப்பாளர்களால் தான் செய்ய முடியும். இன்றைய சூழ்நிலையில் நேர்மையாக முனேற்றம் அடைந்தவர்களால் தான் தங்களது சொத்து விபரத்தை அறிவிக்க முடியும். அதை அண்ணாச்சி அறிவித்திருக்கிறார். இவரது மகன்களை விஜய் வசந்தை ஹீரோவாகவும் வினோத்குமாரை தயாரிப்பாளராகவும் உயர்த்தியிருக்கிறார். இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாக வேண்டும். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. இவர் நடிகராகவும் இருக்கிறார்.இரண்டிலும் மேலும் மேலும் உயர்ந்து நல்ல பெரும் புகழும் பெற வேண்டும்.

இந்த படத்தின் இன்விடேஷன் பாரதியாரின் மீசையை போன்ற வடிவத்தில் இருந்தது, அச்சமின்றி என்ற எழுத்தும் பாரதியாரின் கையெழுத்தை பிரதிபலிக்கின்ற வகையில் அமைத்திருக்கிறார்கள். இதிலிருந்து டைரக்டர் எதாவது வித்தியாசம் செய்ய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது தெரிகிறது என்றார்.

விழாவில் படத்தின் இசையமைப்பளார் பிரேம்ஜி பேசியதாவது…

விஜய் வசந்த் ஹீரோவாகவும், வினோத்குமார் தயாரிப்பாளராகவும் ஒரு படம் எடுக்க போகிறோம் என்று சொல்லும்போதே நான் தான் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் எடுத்த இரண்டு படத்திற்கும் நான் தான் இசையமைத்தேன். இனி அவர்கள் எடுக்க போகும் படங்களுக்கும் நான் தான் இசையமைப்பேன். இது எங்களுக்குள் வாய் வார்த்தையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் காப்பியடித்து போட்டிருக்கிறேன் என்று பலர் பேசிக்கொன்டிருக்கிறார்கள். ஆமாம் நான் காப்பியடித்து தான் போட்டுக்கொண்டு கொண்டிருக்கிறேன். எனது பெரியப்பா ( இளையராஜா ) இசையமைத்த பாடல்களை தான் மாற்றி போட்டுக் கொண்டிருக்கிறேன். வேறு யாருடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் திருடவில்லை. எங்கள் குடும்ப சொத்தான ( இளையராஜா ) இசையிலிருந்து தான் திருடிப் போடுகிறேன். எல்லோருமே அவருடைய இசையிலிருந்து தான் மாற்றி பாடல்களை போடுகிறார்கள் நான் எடுத்து போடக் கூடாதா ?

என்னிடம் இயக்குனர்கள் நீங்கள் இளையராஜா போன்று இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்று கேட்பார்கள். நான் வரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும் தான் போட்டுக் காட்ட முடியும். சொன்னபடி ஒருநாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக்கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன். அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். பெரியப்பா வீட்டு வாசலிலும் ஒட்டிவிட்டார்கள். பெரியப்பா கூப்பிட்டு பேசினார்.. என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா என்று கேட்டார். அதற்கு நான் இல்லை பெரியப்பா உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள் அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டிவிட்டார்கள் என்று சொன்னேன் என்றார் பிரேம்ஜி.

விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…

பிரேம்ஜி உன்னமையாகவே திறமைசாலி. அவனுக்குள் இசையாற்றல் இருக்கிறது. இசை எங்க குடும்பத்தின் ரத்தத்தில் இருக்கிறது. அதுதான் அவனுக்குள் இருந்து வெளிவருகிறது. பிரேம்ஜி நான் இசையமைத்த பாடல்களுக்கு என்னுடன் பணியாற்றி இருக்கிறான். அவன் இசையமைக்கிறான், நடிக்கிறான் இதில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்து என்றேன். அதற்கு அவன் என்னை அதிகமாக நடிக்க தான் கூப்பிடுகிறார்கள் என்றான். எது உனக்கு வருகிறதோ, விருப்பமாக இருக்கிறதோ அதில் அதிகமாக கவனம் செலுத்து. அப்பொழுது தான் நீ வெற்றி பெற முடியும் என்று சொன்னேன் என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது..

இந்த படத்தின் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இயக்குனர் ராஜபாண்டி சமூக அக்கறை கொண்டவர். அவரது படங்கள் நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியதாக இருக்கிறது. நிச்சயம் ஒரு பெரிய இயக்குனராக வருவார். இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் சம்பளத்தை அளந்துதான் தருகிறார். விஜய் வசந்த் இயல்பான நடிப்பாற்றல் கொண்டவர். நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் வினோத்குமார்… இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைத்தார்கள். படம் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் வகையில் பிரேம்ஜி இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் ராஜபாண்டி சோஷியல் மேசேஜ் உள்ள ஒரு கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. அதை தான் அச்சமின்றி படமாக எடுத்திருக்கிறோம். எங்களுடைய எல்லா படங்களையும் அண்ணன் வெங்கட் பிரபுதான் துவைக்கி வைத்திருக்கிறார். அனைத்திலும் கலந்து கொண்டிருகிறார் என்றார் தயாரிப்பாளர் வினோத்குமார்.

படத்தின் நாயகன் விஜய் வசந்த் பேசியதாவது…

இயக்குனர் ராஜபாண்டி படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார். திறமையான இயக்குனர். என்னை வைத்து படம் எடுக்க பணம் கொடுத்த அப்பாவிற்கும்(வசந்த்குமார் ) தயாரித்த தம்பி (வினோத்குமார் ) க்கும் நன்றி. இந்த படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும். வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

விழாவில் நடிகை ரோகினி பேசியதாவது..

இப்பொழுது அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்து வருகிறேன். நல்ல கதையுள்ள படம் கிடைத்தால் தமிழில் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். இப்பொழுது கிடைத்திருக் கிறது. அச்சமின்றி படத்தில் நடித்திருக்கிறேன். திறமையான இயக்குனர் ராஜபாண்டி. என்னுடன் சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் சிறந்த கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் மிகப் பெரிய வெற்றியடையும்.

விழாவில் இயக்குனர் வெங்கட்பிரபு பேசியதாவது..

சென்னை 28 படத்திலிருந்து நாங்களும், விஜய்வசந்த், வினோத்குமாரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை போன்று நண்பர்களாக இருக்கிறோம். அதனால் தான் சென்னை 28 படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக கலந்துகொண்டிருகிறோம். பிரேம்ஜி இவர்கள் இந்த படத்தை எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நான் தான் இசையமைப்பாளர் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டான். எல்லா படத்திற்கும் இசையமைக்கிறான். என் படத்திற்கு மட்டும் இசையமைக்க வில்லை என்று கேட்கிறார்கள். நான் அவனிடமே சொல்லிவிட்டேன். நீ என் படத்தில் நடிப்பதாக இருந்தால், இசையமைக்க முடியாது? இசையமைப்பதாக இருந்தால் நடிக்க முடியாது ? என்று கண்டிஷன் போட்டேன் அவனும் உன் படத்தில் நடிகனாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டான். இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.