‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை பெற்று இருக்கிறது விஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ திரைப்படம்

என்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை,  திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்…. அப்படி ஒரு  புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம்…. வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த  படத்திற்கு   ‘புரியாத புதிர்’  என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி,  ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்து இருக்கும்   ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை  ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி  இருக்கிறார் ஜே சதீஷ் குமார். இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான  ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்பு முனை காட்சிகளை கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று நாங்கள் அனைவரும் கருதினோம்….  விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்பு தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, நாங்கள் ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ செளத்ரி சாரை அனுகினோம்…அவர் இந்த தலைப்பை எங்களுக்கு பரந்த மனப்பான்மையோடு வழங்கியது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.  வருகின்ற நவம்பர் மாதத்தில் நாங்கள் எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது படமாகவும் விளங்கும்   ‘புரியாத புதிர்’  திரைப்படம், நிச்சயமாக இந்த வருடத்திற்கான வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய் சேதுபதிக்கு பெற்று தரும்….” என்று நம்பிக்கையுடன்  கூறுகிறார்  ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்.