‘சென்னை 28 – II’ ஆம் பாகத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறது ‘அபிஷேக் பிலிம்ஸ்’

முழுக்க முழுக்க கூட்டு முயற்சியில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். எந்த நேரத்திலும் ‘டென்ஷன்’ ஆகாத ஒரு கேப்டன் மற்றும் வெற்றி கோப்பைக்காக தங்களையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அணியினர்…. இவை இரண்டும் இருந்தால் நிச்சயமாக அந்த அணிக்கு வெற்றி நிச்சயம்….தற்போது அதே பாணியில் உருவாகி இருப்பது தான் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு இயக்கி தயாரித்து இருக்கும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம். ரசிகர்கள் மட்டுமின்றி வர்த்தக உலகிலும் அமோக  எதிர்பார்ப்பையும், வரவேற்பையும்  தொடர்ந்து பெற்று வரும் இந்த ‘சென்னை 28 – II’ படத்தின் தமிழ்நாடு அளவிலான விநியோக உரிமையை, தற்போது ‘அபிஷேக் பிலிம்ஸ்’ சார்பில்  வாங்கி இருக்கிறார்  ரமேஷ் கே பிள்ளை.
“என்னுடைய பாலிய கால சிநேகிதத்தை என் மனதில் மீண்டும் விதைத்த திரைப்படம் சென்னை 28.  தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தோடு நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு விநியோக நிறுவனமாக, எங்கள் படத்தை விளம்பர படுத்துவதில் நாங்கள் மும்மரமாக ஈடுப்பட்டு வருகிறோம். இதுவரை நாம் அனைவரும் ஐ பி எல் ஆட்டத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தோம்…. ஆனால் தற்போது நம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளையாடக் கூடிய ‘தெருமுனை கிரிக்கெட்’ ஆட்டத்தை கொண்டாட இருக்கிறோம்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘அபிஷேக் பிலிம்ஸ்’ ரமேஷ் கே பிள்ளை.