‘எனி குட் நியூஸ்’ என்ற காணொளியை ‘கல்ச்சர் மிஷினோடு’ இணைந்து வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப்

திருமணமாகி சில மாதங்கள் முடிந்த பெண்ணிடம், அவளின் பெற்றோர் கேட்கும் ஒரே கேள்வி “ஏதேனும் நல்ல செய்தி உண்டா….?” என்பது தான்.  அவள்  கருத்தரித்து விட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சி அவளின் பெற்றோருக்கு இருக்கவே முடியாது…. இது மட்டும் தான் காலம் காலமாக தென்னிந்திய பெற்றோர்களின் முக்கியமான குறிக்கோளாக இருந்து வருகிறது… இந்த கருத்தை முன் நிறுத்தி, ‘எனி குட் நியூஸ்’ என்ற நகைச்சுவை கலந்த காணொளியை ‘கல்ச்சர் மிஷினோடு’ இணைந்து வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப்.
திருமணமாகி சில மாதங்கள் ஆன தன் பெண் சோபியை காண வருகிறார் அவளின் தாய்…. வந்ததும் அவர் தன் மகளிடம் கேட்கும் முதல் கேள்வி, “ஏதேனும் நல்ல செய்தி  உண்டா….? என்பது தான். இந்த கேள்வியை ஆழமாக உணராத சோபி, முதலில் தன்னுடைய கூந்தல் எந்தவித பாதிப்புமின்றி நீளமாக வளருவதையும், தன்னுடைய முகத்தில் இருந்த பருக்கள் மறைந்து போனதையும் பற்றி பாட்டாக தன் தாயிடம் பாட ஆரம்பிக்கிறாள்….அதன் பிறகு, தன்னுடைய அலுவலகத்தில் தான் பெற்ற பதவி உயர்வையும், மேற் படிப்பிற்கான தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதையும் பற்றி தன் தாயிடம் கூறுகிறாள்…. ஆனால் தான் கூறிய எந்த விஷயத்திற்கும் தன்னுடைய தாயின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படவில்லை…. எனவே அடுத்ததாக  சிரியா நாட்டில் நடந்து வரும் போரை நிறுத்த  நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை பற்றி சோபி தன்னுடைய தாயிடம் கூறுகிறாள், ஆனால் அப்போதும் அவளின் தாயின் முகம் மலரவில்லை…. அப்போது தான் தன்னுடைய தாய் கேட்ட   “ஏதேனும் நல்ல செய்தி உண்டா….?” என்ற கேள்வியின் உண்மையான அர்த்தம் அவளுக்கு  புரிகின்றது…. தன்னுடைய மகள் அவளின் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்து சென்றாலும், அவள் தாயாவதை மட்டுமே உண்மையான வெற்றியாக கருதுகிறார் அவளுடைய தாய்…. இதனை மைய கருத்தாக கொண்டு உருவாகி இருப்பது தான்  இந்த ‘எனி குட் நியூஸ்’  என்னும் காணொளி.
” திருமணமான பெண்களின் வாழ்க்கையில் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பது   ‘எனி குட் நியூஸ்’  என்னும் கேள்வி தான்…. நம் வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தாலும் சரி, நாம் கருவுற்றாள் மட்டும் தான் அதனை உண்மையான வெற்றியாக நம் தாய்மார்கள் கருதுகின்றனர்…இத்தகைய நிலை மாற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த காணொளி… இந்த காணொளியை என் தாய் பார்த்து விட்டு வயிறு குலுங்க சிரித்தார்… ஆனால் அந்த பிறகு அவர் என்னிடம் கேட்ட கேள்வி ‘எனி குட் நியூஸ்’ ….” என்று புன்னைகயுடன் கூறுகிறார் சோபியா அஷ்ரப்.
 ‘சிஸ்டா பிரம் தி சவுத்’ தொடரின் அடுத்த படைப்பான  இந்த காணொளி, பெற்றோர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.