புதுமையான கதைக்களத்தின் மூலம் சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் ஒருபுறம்…அற்புதமான நடிப்பாற்றலால் தனது அறிமுக படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் மறுபுறம்…இவர்கள் இருவரும் கைக்கோர்த்து இருக்கும் திரைப்படத்தில், இசை பிரியர்களை தன்வசம் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது…. அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து இருப்பது தான், ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ புகழ் ஷிரிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். தயாரிப்பாளர் சக்தி வாசனோடு இணைந்து ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் யுவன்ஷங்கர் ராஜா.
“இசை கருவிகளுக்கெல்லாம் அரசராக கருதப்படுவது பியானோ….கருப்பு – வெள்ளை கட்டைகளை கொண்ட அந்த இசை கருவியின் மீது யுவன்ஷங்கர் ராஜா சாரின் விரல்கள் படுமானால், அது மேலும் மேலும் சிறப்பு. அப்படிப்பட்ட யுவன்ஷங்கர் ராஜா சார் எங்கள் படத்திற்கு இசையமைப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. இயக்குனர் தரணி அவரிடம் படத்தின் கதையை சொன்ன அடுத்த கனமே எங்கள் படத்தில் பணியாற்ற அவர் முடிவு செய்துவிட்டார்….வருகின்ற நவம்பர் மாத முதல் வாரத்தில் இருந்து அவர் இசையமைக்கும் பணிகளை துவங்க இருக்கிறார்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஷிரிஷ். வருகின்ற நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கின்றது.