“முகமூடி மனிதனுடன் ‘தாயம்’ விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்

தடகள வீரர், ஆழ் கடல் மூழ்காளர், மலை ஏறுபவர், நீச்சல் வீரர், மாடல் ஆகியவற்றை தாண்டி, தமிழ் சினிமாவில்  சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்  பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்.  கம்பீர தோற்றம் மற்றும்  கட்டுமஸ்தான உடல் வாகை கொண்டு கட்டழகனாக தோற்றமளிக்கும் எம் பி ஏ பட்டதாரியான சந்தோஷ் பிரதாப், தன்னுடைய இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் பாராட்டுகளை, குறிப்பாக பெண் ரசிகர்களின் பாராட்டுகளை  அதிகளவில் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது…..இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளி வர இருக்கும் திரைப்படம், ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து  இருக்கும் ‘தாயம்’.  கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு.
“தாயம் திரைப்படத்தில் ‘சா’ மற்றும் ‘எக்ஸாம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் சாயல் இருக்கின்றது என்று கூறும் சில பதிவுகளை நான் சமூகவலைத்தளங்களில் பார்த்தேன்…. அது எந்த விதத்திலும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க ஒரு நேர்க்காணலை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் ‘தாயம்’. எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பது தான் தாயம் படத்தின் கதை….” என்று தெளிவாக கூறுகிறார் சந்தோஷ் பிரதாப்.
“எங்களின் தாயம் படத்தின் கதைக்களத்தில் ஒரு தனித்துவமான சிறப்பம்சம் இருக்கின்றது….ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தின் கதைக்களம் மாறி கொண்டே இருக்கும்…. மர்மம், திகில், சஸ்பென்ஸ் என கதைக்களம் மாறி கொண்டே இருக்கும் தாயம் படத்தில் நடிப்பது எனக்கு சவாலாகவே இருந்தது… ஆனால் இயக்குனர் கண்ணன் ரங்கசாமியின் ஒத்துழைப்பால் எனக்கு அது எளிதாகி விட்டது….இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமே ‘முகமூடி மனிதன்’ தான்…. அந்த முகமூடி மனிதனுடன் ‘தாயம்’ விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…ஆனால் நான் விளையாடுகிறேன்…. அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ‘ப்ரோஸ்த்தெடிக் மாஸ்க்’ எனப்படும் முகமூடியை  அமெரிக்காவில் இருந்து அதிக தொகை கொடுத்து இறக்குமதி செய்தனர் தயாரிப்பாளர்கள்  ஏ.ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் பி.திரு. நிச்சயமாக என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த தாயம் திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும் என்று முழுமையாக நம்புகிறேன்….’ என்று கூறுகிறார் தாயம் படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்.