நயன்தாரா – கோபி நாயனார் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பெற்று இருக்கிறது

218
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் பெருகி கொண்டே வருகிறது…. பெண்மையையும் அதன் மகிமையையும் பாராட்டி, இந்த 2016 ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சில திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம்…ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்ற அந்த திரைப்பட வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, கோபி நாயனார் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது  கிட்டத்தட்ட நிறைவு பெற்று இருக்கிறது…
‘கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து ,  புதுமுக  இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் தேசிய விருது பெற்ற கலை  இயக்குனர் லால்குடி இளையராஜா என திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு. வலுவான கதை களத்தை கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ், வேலு ராமமூர்த்தி, ஈ ராமதாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 24 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, கடலடி தாலூக்கா,   ‘அப்பனூர்’ கிராமத்தில்  நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், ஏறக்குறைய நயன்தாராவின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், நயன்தாராவோடு ஆயிரத்திற்கும் மேலான சக நடிகர் – நடிகைகள் இணைந்து பணியாற்றினர்.  கிட்டத்தட்ட முழுமையாக  நிறைவு பெற்று இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சில கிராபிக்ஸ் வேலைகளும்,  மெருகேற்றும் பணிகளும்  தான் மிச்சம் இருக்கின்றது . நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் இந்த  படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous article7 Naatkal Movie Stills
Next articleIvan Yaarendru Therigiratha Movie Stills