கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன், அனுராக் காஷ்யப்

கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ‘டிமான்டி காலனி’ புகழ்  அஜய் ஞானமுத்து இயக்கும்  ‘இமைக்கா நொடிகள்’  திரைப்படத்தின் நட்சத்திர பட்டியலானது, நாளுக்கு நாள் சிறப்பான முறையில் அதிகரித்து கொண்டே போகிறது.   அதர்வா, நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார், ஹிந்தி திரையுலகின் தலைச் சிறந்த இயக்குனர் அனுராக் காஷ்யப். ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறந்த படைப்பாளியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் பெருமையும், புகழும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படக்குழுவினருக்கு இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். வலுவான நட்சத்திர கூட்டணியில் உருவாகும்  ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் தற்போது ஏ ஆர் முருகதாஸின் ‘அகிரா’ பட வில்லனான அனுராக் காஷ்யப்  இணைந்திருப்பது , ரசிகர்களின் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
“ஏ ஆர் முருகதாஸ் சாரின் ‘அகிரா’ படத்தில், கருணையற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்றவர் இயக்குனர்  அனுராக் காஷ்யப். எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ கூட்டணியில் அவர் இணைந்திருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….ருத்ரா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார்…வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், இதுவரை தமிழ் ரசிகர்கள் ஒரு திரில்லர் படத்தில் கண்டிராத  புதுமையான வேடத்தில் அவர் நடிக்க இருக்கிறார்…  ” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஏ ஆர் முருகதாஸிடம், ‘7 ஆம் அறிவு’ மற்றும் ‘துப்பாக்கி’ படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பது  குறிப்பிடத்தக்கது.
வர்த்தக உலகில் மிகுந்த ஆர்வத்தை  ஏற்படுத்தி வரும்   ‘இமைக்கா நொடிகள்’  படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதத்தில் துவங்க இருக்கின்றது. வலுவான நட்சத்திர கலைஞர்களை கொண்டு உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை, ரசிகர்கள் ஒரு நொடி கூட தங்களின் இமைகளை மூடாமல் பார்ப்பார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.