ரோன் ஹோவார்ட்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இன்பெர்னோ’. வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘இன்பெர்னோ’ திரைப்படம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ், ராபர்ட் லாங்டன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ‘இன்பெர்னோ’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக, அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபாட்டி.
பாகுபாலி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக ஈடுபட்டு வரும் ராணா டகுபாட்டி, ‘இன்பெர்னோ’ படத்தின் சில பிரத்தியேக காட்சிகளை பார்த்த அடுத்த கணமே, தெலுங்கு பதிப்பிற்காக குரல் கொடுக்க முடிவு செய்துவிட்டார்…. இந்த கதாபாத்திரத்திற்காக மூன்று நாட்கள் டப்பிங் செய்துள்ளார் ராணா. ஒவ்வொரு நாள் இரவும், ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன் பிறகு அவர் இன்பெர்னோ படத்திற்காக டப்பிங் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“டான் பிரவுன் எழுதி இருக்கும் அனைத்து புத்தகங்களும், அதில் தோன்றும் ராபர்ட் லாங்டன் கதாபாத்திரமும் எப்போதுமே என் நெஞ்சோடு ஒட்டி இருப்பவை…. ஹாலிவுட்டின் தலைச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான டாம் ஹான்க்ஸோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்திய வர்த்தக உலகத்தின் சிறப்பை அறிந்து, அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாக இந்தியாவில் இந்த ‘இன்பெர்னோ’ படத்தை வெளியிட முடிவு செய்திருப்பது, நம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் பெருமை….பிற்காலத்தில், பல்வாள் தேவன், ராபர்ட் லாங்டன் கதாபாத்திரங்களில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது, நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்….
டாம் ஹான்க்ஸ் போன்ற தலைச் சிறந்த நடிகரோடு பணியாற்றும் போது, ஒரு நடிகராக நான் பலவற்றை கற்று கொண்டேன்…டப்பிங் போவதற்கு முன்னதாக, நான் என்னுடைய குரலை பதிவு செய்து, அது எப்படி இருக்கிறது என்பதை கேட்டு வந்தேன்… அந்த பயிற்சி எனக்கு டப்பிங் செய்யும் போது பெரிதும் உதவியாக இருந்தது… உண்மையாகவே டாம் ஹான்க்ஸிடம் இருந்து பயிற்சி பெற்றது போன்ற அனுபவத்தை எனக்கு இந்த ‘இன்பெர்னோ’ ஏற்படுத்தி தந்திருக்கிறது. பல நடிகர்கள் ஹாலிவுட் படத்தில் குரல் கொடுப்பதை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது… பி சி, இர்பான், ஜங்கிள் புக் படத்திற்காக ஓம் பூரி, தற்போது ‘இன்பெர்னோ’ படத்திற்காக நான்…..இதே போன்று இன்னும் அதிகமான படங்களுக்கு நான் குரல் கொடுக்க பெரிதும் விரும்புகிறேன்…” என்று உற்சாகத்துடன் கூறினார் ராணா டகுபாட்டி.
இந்த ‘இன்பெர்னோ’ படத்தை வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் ‘சோனி பிச்சர்ஸ் என்டர்டைமென்ட்’ நிறுவனம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.