‘இறைவி’ படப்புகழ் பூஜா தேவாரியாவின் ஹாலிவுட் பயணம்

இயல்பான பாவனைகள் மற்றும் யதார்த்தமான நடிப்பு… இவை இரண்டும் தான் பூஜா தேவாரியாவின் சிறப்பம்சங்கள். செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பூஜா தேவாரியா, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இறைவி படத்தின் மலர் கதாபாத்திரம் மூலம், தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்து விட்டார். அடிப்படையில் தியேட்டர் கலைஞரான இவர், சமீபத்தில் வெளியான ‘குற்றமே தண்டனை’ மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்களின் வலுவான கதாபாத்திரங்கள் மூலம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தன்னுடைய திறமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் பூஜா தேவாரியா, தற்போது பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றி கனியை சுவைக்க இருக்கிறார்.
புகழ் பெற்ற நாடக கலைஞரான பூஜா தேவாரியாவுக்கு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் பிரபலமான ஹாலிவுட்  நாடக விழாவான ‘ஷார்ட் & ஸ்வீட் நாடக விழாவில்’ ‘வளர்ந்து வரும் கலைஞர்’ என்கின்ற விருது வழங்கப் பட்டிருக்கிறது. உலகின் மிக பெரிய நாடக விழாவாக கருதப்படும் இந்த பிரம்மாண்ட விழாவில் பூஜா தேவாரியாவுடன் இணைந்து மதிவாணன் ராஜேந்திரனும் இந்த விருதை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்ட்ரே பேக்டரி’ என்னும் நிறுவனத்தின் சார்பில் இந்த இருவர்  மட்டும்  தான் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்க பட்டிருப்பது மேலும் சிறப்பு. மெக்ஸிகோ, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து கலந்து கொண்ட கலைஞர்கள் மத்தியிலும், ‘எமி விருது’ பெற்ற நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இந்த விருதை இவர்கள் இருவரும் பெற்று இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை.
‘மை நேம் ஸ் சினிமா’ மற்றும் ‘வா வன் கோ’ ஆகிய இரண்டு நாடகங்களை இந்த விழாவில்  பூஜா தேவாரியாவும்,  மதிவாணன் ராஜேந்திரனும் அரங்கேற்றி இருக்கின்றனர் . அதுமட்டுமின்றி, சென்னை, மும்பை, கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் வெற்றி பெற்று, சிட்னி மற்றும் ஆக்லேண்ட் நகரங்களில் அரகேற்றப்பட்ட   ‘மை நேம் ஸ் சினிமா’ நாடகத்திற்காக, சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை இவர்கள் இருவரும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠