பேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….? மேற்கொண்டு கவனமாக வாசியுங்கள்.
திரைப்படத்தின் ‘க்ளைமேக்ஸ்’ காட்சியில் அதிர்ச்சியான ‘லைவ் நிகழ்வு’ ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
இந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சான்ஃபிரான்சிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பாலம் அருகில், சென்னை என்றால் மெட்ரோ ரயில், மெரினா, விமான நிலையம் இப்படி எளிதில் அடையாளம் தெரியும்படியான இடங்கள் உங்களுக்கு பின்புறம் அமையும்படி, ஹெச்.டி. (HD) ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். சிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம்.
இந்த காணொளி பதிவு இந்தியாவாக இருந்தால் இரவு நேரத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். இந்திய நேரம் IST நேரத்திற்கு தகுந்தாற்போல் பிற நாடுகளின் நேரம் இருக்கவேண்டும். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருப்பின் பகலாக இருத்தல் அவசியம்.
பதிவு செய்யுங்கள்! வீடியோவை #IAMNIBUNAN என்ற ஹாஷ் டாக் மூலம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்யுங்கள். மாதிரி வீடியோவில் பிரசன்னாவும், வரலக்ஷ்மியும் உங்களுக்காக நடித்து காட்டியிருக்கிறார்கள். கற்பனை குதிரையைத் தட்டி விடுங்கள். உங்களின் வீடியோவைக் காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.