வெங்கட் பிரபுவும், அவருடைய ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் படக்குழுவினரும், தங்கள் படத்தின் இசை மற்றும் டிரைலரை வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரத்தில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தில் மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.
“வயதாகாமால் இருப்பதற்காக நாம் விளையாடுகிறோம்; விளையாடுவதை நிறுத்திவிட்டால் நமக்கு வயதாகிவிடும்….” என்பது ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் பிரபலமான வார்த்தைகள். அத்தகைய விளையாட்டுடன் இசையும் இணைந்தால், உற்சாகத்திற்கும், மகழ்ச்சிக்கும் அளவே இருக்காது. இன்னும் சொல்ல போனால், ஒரு மனிதனை இளமையாக வைத்திருக்க உதவும் முக்கியமான இரண்டு சிறப்பம்சங்கள் இசையும், விளையாட்டும் தான் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அப்படி ஒரு உற்சாக உணர்வை நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கி இருக்கிறது, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘சென்னை 28’ திரைப்படம். குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமின்றி, வளர்ந்த நடுத்தர வயதினரைக் கூட மீண்டும் ஒரு முறை அந்த படம் இளைஞர்களாக மாற்றி உள்ளது…. முதல் பாகத்தில் தோன்றிய எல்லா இளம் கதாபாத்திரங்களும் பல வருடங்கள் கழித்து நட்புக்காகவும், கிரிக்கெட்டுக்காகவும் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்தால்…..
‘சென்னை 28’ முதல் பாகத்தின் வெற்றிக்கு ஒரு மிக பெரிய தூணாக செயல்பட்டது யுவன்ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை என்று சொன்னால் அது மிகையாகாது. அதே போல் தற்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவாகி இருக்கும் ‘பாய்ஸ் ஆர் பேக்’ மற்றும் ‘சொப்பன சுந்தரி’ பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மேலும் பிரம்மாண்ட முறையில் மெருகேற்றும் விதமாக, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களின் படக்குழுவினருடன் இணைந்து, மலேசியாவில் இசை மற்றும் டிரைலரை விமர்சையாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
“தமிழ் திரைப்படங்களின் சொர்க வாசலாக கருதப்படும் ஒரு நாடு மலேசியா. ஒவ்வொரு படங்களையும் திருவிழாவாக கொண்டாடும் மலேசியா ரசிகர்கள் தான் அந்த சொர்க வாசலின் வலுவான தூண்கள்… தமிழ் திரையுலகின் வெற்றி பாதைக்கு சிறந்ததொரு கலங்கரை விளக்கமாக திகழ்வது மலேசியா. சிறந்த திரைப்படங்கள் பல மலேசியாவில் படமாக்கப்பட்டது மட்டுமின்றி, அங்கே சிறப்பான முறையில் விளம்பர படுத்தப்பட்டிருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். அதுமட்டுமின்றி, பல திறமையான கலைஞர்களை சினிமாவிற்கு வழங்கிய பெருமையும் மலேசியாவிற்கு உண்டு…அத்தகைய அற்புதமான ரசிகர்கள் மத்தியில் எங்களின் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம். யுவன்ஷங்கர் ராஜா மீது மலேசிய ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை மனதில் கொண்டு, அங்கே எங்களின் இசை மற்றும் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் வெங்கட் பிரபு.