காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரமேஷ். இவரின் மூத்த சகோதரரான ரஞ்சித் குமார் தற்போது 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார். பதினொன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் எண்ணூரை சார்ந்த ரஞ்சித் குமார் நடித்து வரும் இந்த 8 தோட்டாக்கள் படத்தை ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்க, இணை தயாரிப்பு செய்கிறது ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் தீவிர ரசிகரான இளம் ரஞ்சித் குமாருக்கு, தமிழ் திரையுலகில் சிறந்ததொரு நடிகராக உருவெடுக்க வேண்டும் என்பது தான் முக்கியமான குறிக்கோளாக இருக்கின்றது. “முதலில் என்னுடைய இளைய சகோதரர் ரமேஷை தான் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்வதாக இருந்தது…அதன் பின்னர் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் பிரபா என்னும் பிக் பாக்கெட் அடிக்கும் இளைஞனாக நான் நடித்திருக்கிறேன்….”
“இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் வெள்ளைப்பாண்டியன் சாருக்கும், இயக்குனர் ஸ்ரீ கனேஷ் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முதல் படத்திலேயே தலை சிறந்த நடிகர் நாசர் சாரோடு இணைந்து பணியாற்றி இருப்பது, எனக்கு கிடைத்த வரம். படப்பிடிப்பில் பணியாற்றும் போது நான் என் வீட்டில் இருந்ததை போல் தான் உணர்ந்தேன்… அந்த அளவிற்கு ‘8 தோட்டாக்கள்’ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினரும் என் மீது அன்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர். நிச்சயமாக என்னுடைய பிரபா கதாபாத்திரமானது ரசிகர்களின் உள்ளங்களில் கூர்மையான தோட்டாக்களை போல ஆழமாக பதியும் என பெரிதும் நம்புகிறேன்…” என்று கூறுகிறார் ரஞ்சித் குமார்.