எண்ணற்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளி வந்து கொண்டிருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிகின்றது… அதற்கு முக்கிய காரணம் படத்தின் வலுவான கதை களம். அப்படி ஒரு சிறந்த கதையம்ச்சத்தோடு உருவாகி இருக்கிறது இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘அம்மணி’ திரைப்படம். ‘டேக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கும் ‘அம்மணி’ திரைப்படமானது, ‘சாலம்மா’ (57) மற்றும் ‘அம்மணி’ (82) என்னும் இரண்டு கதாப்பாத்திரங்களின் உறவை மையமாக கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ‘சாலம்மா’ கதாப்பாத்திரத்திலும், சுப்பலக்ஷ்மி (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் பாட்டியாக நடித்தவர்) ‘அம்மணி’ கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கும் ‘அம்மணி’ படத்தில், நித்தின் சத்யா, ரோபோ ஷங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ பாலாஜி, ரெஜின் ரோஸ், சி ரேணுகா மற்றும் எஸ் அன்னம்ம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 105 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘அம்மணி’ திரைப்படத்தில் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களாகிய ஒளிப்பதிவாளர் கே ஆர் இம்ரான் அஹமட், இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் கே ஆர் ரெஜித், கலை இயக்குனர் ஏ எஸ் ராஜா, பாடலாசிரியர் (லேட்) நா முத்துக்குமார் மற்றும் நடன இயக்குனர் எம் ஷெரிப் ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக பெற்று வரும் ‘அம்மணி’ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
“அம்மணி கதையை படிக்கும் போது நான் ஒரு நாவலை படிப்பது போல தான் உணர்ந்தேன்…. அந்த அளவிற்கு இந்த கதையம்சமானது சுவாரசியமாக இருந்தது… வெறும் ஒரு பொழுது போக்கு திரைப்படம் என்பதை தாண்டி பல சிறப்பம்சங்கள் எங்களின் ‘அம்மணி’ படத்தில் இருக்கிறது…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘டேக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும், ‘அம்மணி’ படத்தின் தயாரிப்பாளருமான வெண் கோவிந்தா.
“அம்மணி’ திரைப்படம் பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பொதுவான படமாக விளங்கும்… பொதுவாகவே நாம் எப்படியெல்லாம் சிறப்பாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் யோசிப்பார்கள்… ஆனால் தன்னுடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்கும் ஒரு பெண்மணியை பற்றிய கதை தான் ‘அம்மணி’. இப்படிப்பட்ட வலுவான கதை களத்தை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் வென் கோவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் ‘அம்மணி’ படத்தை காலம் சென்ற உன்னதமான கவிஞர் நா முத்துக்குமார் அவர்களுக்கு நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம்…’அம்மணி’ படத்திற்காக அவர் எழுதி தந்திருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் காவியம்…’லைப்பே மச்சான் மச்சான்… ஒரு ப்ரீபெய்டு போனு…’ என்னும் பாடல் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை இன்றைய கால தத்துவத்தோடு ஒன்றிணைத்து மிக அழகாக சொல்லி இருக்கிறார் நா முத்துக்குமார். நிச்சயமாக எங்களின் ‘அம்மணி’ திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘அம்மணி’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.